எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பீகார் வரைவு வாக்காளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், மொத்த வாக்காளர் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. தொகுதி வாரியாக வெளியாகி உள்ள பட்டியல் அடிப்படையில் கணிக்கிட்டபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, பீகார் தலைநகர் பாட்னாவில் மட்டும் 3,95,500 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மதுபானி மாவட்டத்தில் 3,52,545 வாக்காளர்களும், கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 3,16,793 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். கோபால் கஞ் மாவட்டத்தில் 3,10,363 வாக்காளர்களும், சமஸ்திபூர் மாவட்டத்தில் 2,83,955 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கோபால் கஞ்ச் மாவட்டத்தில் 15% வாக்காளர்கள், கிருஷ்ணா கஞ்ச் மாவட்டத்தில் 11.8% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் மாநிலம் முழுவதும் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு பின், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்குதல், திருத்தத்துக்கு பிறகு 7 கோடியே 93 லட்சமாக இருந்த பீகார் வாக்காளர் எண்ணிக்கை சிறப்பு திருத்தத்துக்கு பின், 7 கோடியே 24 லட்சமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, பீகாரில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 20 முதல் 30 ஆயிரம் வரையிலான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியிருக்கிறது. 65 லட்சம் வாக்காளர்கள் என்பது மொத்த வாக்காளர்களில் 8.5 சதவீதம். நீக்கப்பட்ட வாக்களார்களின் விவரத்தை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை. அவர்கள் யார்? யார்? என்பதை அறிந்துகொள்ள அரசியல் கட்சிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் தேர்தல் ஆணையம் செவிமடுக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.