அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் பற்றியும், இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா செல்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி மக்களவையில் கேள்விகளை எழுப்பினார்.
“ஜனவரி 2025 முதல் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய குடிமக்கள் குறித்த தரவுகளை அரசாங்கம் வைத்திருக்கிறதா? அப்படியென்றால் அவர்கள் நாடு கடத்தப்பட்ட முறைகள் என்ன?; அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலிருந்து நாடுகடத்தப்படும் இந்திய நாட்டினரை திருப்பி அனுப்பும்போது பயணம் தொடர்பான சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் மனிதாபிமானத்துடன் நடத்துவதை உறுதி செய்ய அரசாங்கம் ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்துள்ளதா?
மாணவர் விசா செயல்முறைகளில் சமீபத்திய மாற்றங்கள் மற்றும் தாமதங்கள், குறிப்பாக மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் விசாக்களுக்கான புதிய நியமனங்கள் (F, M, J பிரிவுகள்) இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவை குறித்து அமெரிக்க அரசிடம் இருந்து நமது இந்திய அரசுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டதா?
அமெரிக்காவில் நாடுகடத்தல், விசா மறுப்பு மற்றும் சமூக ஊடக கணக்கு சரிபார்ப்பு நடைமுறைகளை எதிர்கொள்ளும் இந்திய மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரின் நிலையை கண்காணிக்க அரசாங்கத்திடம் ஏதேனும் பொறிமுறைகள் உள்ளதா? நாடு கடத்தப்பட்ட இந்திய மாணவர்களுக்கு மறுவாழ்வு அளித்திட அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?” ஆகிய கேள்விகளை கனிமொழி எம்பி கேட்டிருந்தார்.
இக்கேள்விகளுக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் கிர்த்தி வரதன் சிங் அளித்த பதிலில், “2025 ஜனவரி 20 ஆம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 1703 இந்திய குடிமக்கள் அமெரிக்க அரசால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1562 பேர் ஆண்கள், 141 பேர் பெண்கள் ஆவர்.
இவர்களில் அமெரிக்க சுங்கத்துறை, எல்லைப் பாதுகாப்புத் துறை விமானங்கள் மூலமாக பிப்ரவரி 5, 15, 16 தேதிகளில் 333 இந்திய குடிமக்கள் அனுப்பப்பட்டனர். அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையால் தனி விமானங்கள் மூலமாக மார்ச் 19, ஜூன் 8, ஜுன் 25 ஆகிய தேதிகளில் 231 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஏற்பாட்டில் தனி விமானங்கள் மூலமாக ஜூலை 5, ஜூலை 18 தேதிகளில் 300 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.’ மேலும் பனாமாவில் இருந்து வர்த்தக விமானங்கள் மூலமாக தனி நபர்களாகவோ சிறு குழுக்களாகவோ 72 பேர் விமான டிக்கெட் ஏற்பாடு செய்யப்பட்டு இந்தியா திரும்பினர்.
இதேபோல அமெரிக்காவில் இருந்து வர்த்தக விமானங்கள் மூலமாக 767 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் அதிகபட்சமாக பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் 620 பேரும், ஹரியானவை சேர்ந்தவர்கள் 604 பேரும் ஆவர். அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 17 பேர்.
நாடு கடத்தல் நடவடிக்கைகளின் போது இந்திய குடிமக்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதை உறுதி செய்வதற்காக வெளியுறவு அமைச்சகம் அமெரிக்கத் தரப்போடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
நாடு கடத்தப்படுபவர்களை நடத்தும் முறை குறித்து குறிப்பாக கை விலங்குகளைப் பயன்படுத்துவது குறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முறையாக நடத்துவது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் வெளியுறவு அமைச்சகம் தனது கவலைகளை வலுவாகப் பதிவு செய்தது.
நாடு கடத்தல் செயல்பாடுகளின் போது… டர்பன் உள்ளிட்ட தலைப்பாகைகள் பயன்படுத்துதல் மற்றும் விருப்ப உணவு உள்ளிட்ட மத, கலாச்சாரம் தொடர்பான நம்பிக்கைகளுக்கு அனுமதி தருவது தொடர்பாகவும் அமெரிக்கத் தரப்பிடம் முறையாக வெளியுறவு அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5, 2025 க்குப் பிறகு நாடு கடத்தப்படுபவர்களை தவறாக நடத்தியது தொடர்பான எந்த புகாரும் இந்த அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை. மாணவர் விசா நியமனங்களைப் பொறுத்தவரை. இவ்விசாக்களை பெறுவதில் உள்ள சிரமங்களைக் குறைத்திடுமாறு, நமது நாட்டு மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து வெளியுறவு அமைச்சகம் பல மனுக்களை பெற்றிருக்கிறது.
இந்த விஷயத்தை அமைச்சகம் புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் எடுத்துச் சென்றது. அப்போது அமெரிக்க தரப்பில் சில விளக்கங்கள் தெரிவிக்கப்பட்டன.
மாணவர் விசாக்களுக்கான கூடுதல் பாதுகாப்புத் தேவைகள் காரணமாக இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் விசா செயல்படுத்தும் திறனை குறைத்திருந்தன. இருப்பினும், மாணவர் விசா நியமனங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன.
J-1 மருத்துவர் பிரிவைப் பொறுத்தவரை, அமெரிக்கத் தரப்பு அவர்களின் நியமனங்களுக்கு முன்னுரிமை அளிக்க மென்பொருள் அடிப்படையிலான தீர்வைத் தொடங்கியுள்ளது. இந்த விசா வகையின் கீழ் வாய்ப்பு கிடைக்கவில்லை என முன்னர் தெரிவித்த பல மாணவர்கள், இப்போது பெற்றுள்ளனர். புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு மாணவர் விசா அவசரத் தேவையை அங்கீகரிக்கும் வகையில், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர் விசா வழங்கல்களை விரைவுபடுத்த அமெரிக்கத் தூதரகம் செயல்பட்டு வருகிறது.
மாணவர் விசா பிரச்சினையை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையைக் குறைக்க உதவும் வகையில்… அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) கொண்ட மாணவர் விசா ஃபேக்ட் ஷீட்-டை அமெரிக்கத் தூதரகம் உருவாக்கி வருகிறது என அமெரிக்க தரப்பில் நமது அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா வழங்குவது என்பது சம்பந்தப்பட்ட நாட்டின் இறையாண்மை உரிமையாக இருந்தாலும், அமெரிக்க விசாக்களைப் பெறுவதில் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் வாஷிங்டனில் உள்ள உள்ள அமெரிக்க அரசின் வெளிவிவகாரத் துறையுடனும் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் மாணவர்கள், பணிக்காக செல்பவர்கள் உள்ளிட்ட சட்டப்பூர்வ பயணங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், குறுகிய கால சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களை எளிதாக்குவதற்கும் பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் பாதுகாப்பான கட்டமைப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசி வருகிறது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள இந்திய மாணவர்களுடன் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் வழக்கமான தொடர்புகளைப் பேணுகின்றன.
வெளிநாடுகளில் இருக்கும் நமது மாணவர்களின் நலன் தொடர்பான விவகாரங்களை நமது தூதரகங்களில் உள்ள அர்ப்பணிப்புள்ள அதிகாரிகள் அக்கறையாக கண்காணித்து கவனித்து வருகிறார்கள்.
உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் MADAD போர்ட்டலில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்கள் உட்பட வெளிநாடுகளில் குடியேறியுள்ள இந்தியர்களின் குறைகளை தீர்த்து வைப்பதில் நமது தூதரகங்கள் முன்னுரிமை கொடுக்கின்றன. வெளிநாடுகளில் உள்ள நமது குடிமக்களுடன் தொலைபேசி அழைப்புகள், நேரடியாக சந்தித்தல், மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள், 24x7 அவசர உதவித் தொலைபேசி எண்கள் மற்றும் MADAD போர்டல் மூலம் அவர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் கவனித்து பதிலளிக்கப்படுகின்றன.
அவசர மருத்துவ பராமரிப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து சாத்தியமான தூதரக உதவிகளும் பிரச்சினையில் இருக்கும் இந்தியர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் உடனடியாக வழங்கப்படுகின்றன. மாணவர்கள் உட்பட வெளிநாட்டு இந்தியர்களுக்கு சிக்கலான சூழ்நிலைகளில் உதவுவதற்காக, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இந்திய சமூக நல நிதியம் (ICWF) அமைக்கப்பட்டுள்ளது” என வெளியுறவுத் துறை இணையமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.