M K Stalin
“தமிழகத்தின் உரிமைகளுக்காக வாதாடியவர்” - பி.எச்.பாண்டியன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
திராவிட நோக்கும், பார்வையும், சுயமரியாதையும், போர்க்குணம் காரணமாக பி.எச்.பாண்டியன் மீது அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தலைவர் கலைஞர் அளவு கடந்து அன்பு வைத்திருந்தார் எனக் குறிப்பிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாடு சட்டப் பேரவையின் முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான பி.எச் பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்குமுறை சட்டப் பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை திருநெல்வேலி மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றி - சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கம்பீரக் குரல் எழுப்பி, தொகுதி மக்களுக்காக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் வாதாடியவர். சட்டப் பேரவையின் தலைவருக்கு “வானளாவிய அதிகாரம்” இருக்கிறது என்பதைத் தனது செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்திய அவர், மறைந்த முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர்.
அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு பி.எச். பாண்டியன் மீது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததை நான் அறிவேன்; அதற்குக் காரணம் அவரிடம் குடிகொண்டிருந்த திராவிட நோக்கும், பார்வையும், சுயமரியாதையும், போர்க்குணமும் ஆகும்.
இத்தகைய தன்மைகள் தன்னிடமிருந்து பிரிக்க முடியாதவை என்பதை அஞ்சா நெஞ்சத்துடன் பிரகடனப்படுத்தும் வகையில் தனது கருத்துக்களை ஆணித்தரமாகவும், சட்டப்பூர்வமாகவும் எந்த அரங்கத்திலும் எடுத்து வைப்பதில் பி.எச் பாண்டியன் அவர்களுக்கு நிகர் அவர்தான் என்பதை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.
அவரது மறைவு அரசியல் தலைவர்களுக்கு மட்டுமின்றி, வழக்கறிஞர் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பி.எச் பாண்டியன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!