M K Stalin

''தகவல் ஆணையரை தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை''- கூட்டத்தை புறக்கணித்த மு.க.ஸ்டாலின்!

சென்னை தலைமைசெயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தலைமை தகவல் ஆணையர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு குழு நடைப்பெற்றது.

ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான குழுவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த தேர்வு குழு பரிசீலனையின் அடிப்படையில், மூன்று பேர் கொண்ட பட்டியலை ஆளுநருக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த கூட்டத்தில், தேர்வு குழுவில் உறுப்பினர்களாக உள்ள பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குழுவின் மற்றொரு உறுப்பினர் தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தை புறக்கணித்தார். கூட்டத்தை புறக்கணித்ததற்கான காரணத்தை நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

Also Read: “அ.தி.மு.க அரசின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான்” - தி.மு.க பொதுக்கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அக்கடிதத்தில், ''தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள தலைமைத் தகவல் ஆணையர் பதவியை நியமனம் செய்து நிரப்புவதற்கான பரிந்துரையை மாநில ஆளுநருக்கு அனுப்ப 18.11.2019 அன்று முதலமைச்சர் தலைமையில் தேர்வுக்குழுக் கூட்டம் நடைபெறுவதாகவும், அக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள தங்களின் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

மேலும் அக்கடிதத்தில், தேடுதல் குழு அமைக்கப்பட்டதாகவும், அதன் பரிந்துரை தெரிவுக்குழுக் கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள்? அவர்களின் “பயோ டேட்டா ” விவரங்கள் உள்ளிட்ட எந்த தகவல்களும் கடிதத்துடன் இணைக்கப்படவில்லை.

மிகவும் அவசியமான மேற்கண்ட அடிப்படைத் தகவல்களே கடிதத்தில் இணைக்கப்படாததால் தேடுதல் குழுவின் பரிந்துரையினை ஆழ்ந்து பரிசீலனை செய்து தெரிவுக்குழு உறுப்பினர் என்ற முறையில் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்களின் விவரங்களையே கொடுக்காமல் கூட்டத்தை நடத்துவதால் – ஒளிவு மறைவற்ற வெளிப்படையான ஒரு தேர்வினை நடத்துவதற்கு அரசு தயாராக இல்லை என்பதும், முன்கூட்டியே “மாநில தலைமை தகவல் ஆணையர்” யார் என்பதை முடிவு செய்து விட்டு பெயரளவிற்கு இந்த தெரிவுக்குழுக் கூட்டத்தை நடத்துவதாக நான் கருதுகிறேன்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் பதவியில் அமரும் ஒரு மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும் இந்த நடைமுறை எவ்விதத்திலும் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்பது மட்டுமின்றி - தமிழக அரசில் பரந்து விரிந்து கிடக்கும் ஊழல் தொடர்பான முக்கிய விவரங்களை மூடி மறைப்பதற்கான முயற்சியில் அரசு துவக்கத்திலேயே ஈடுபடுகிறது என்று எண்ணுகிறேன்.

ஆகவே வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத மேற்கண்ட பொருள் குறித்த தெரிவுக்குழு கூட்டத்தில், நான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “சென்னையில் கைதானவர்களுக்கு நடந்த கொடுமை” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மிசா அனுபவங்கள்!