M K Stalin

கழகத் தொண்டர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

வாக்காளர் பட்டியல் திருத்தம், சரிபார்த்தல் பணிகளில் தி.மு.க தொண்டர்கள் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

“இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடக்கும். முன்னதாக, செப்டம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த மாதம் முழுவதும், வாக்காளர்கள் தாங்கள் சார்ந்த பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில், தங்களது பெயரைச் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

இந்நிலையில் இந்த ஆண்டு புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ‘வாக்காளர் சரிபார்த்தல் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் என்.வி.எஸ்.பி. போர்ட்டல் மற்றும் கைபேசி செயலி மூலம் வாக்காளர்கள் தாங்களே பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

இந்தத் திட்டப் பணிகள் 1-9-2019 முதல் தொடங்கியுள்ளது. இப்பணி வருகிற 30-9-2019 வரை நடக்கிறது. இக்காலகட்டத்தில் வழங்கப்படும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன்பின்னர், வருகிற அக்டோபர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

வாக்காளர் சரிபார்த்தல் திட்டப் பணியில், வாக்காளார் உதவி தொலைபேசி எண் 1950, கைபேசி செயலி, தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (என்.வி.வி.எஸ்.பி), பொது சேவை மையங்கள், வாக்காளர் உதவி மையங்கள் இவற்றின் மூலம் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை திருத்தம் மேற்கொள்ளவோ, சரிபார்த்துக் கொள்ளவோ செய்யலாம்.

அவ்வாறு பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும்போது, உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும். ஒருவேளை நேரடியாக வாக்குச் சாவடி அலுவலகர்கள், வாக்காளர் பட்டியல் அலுவலர்களிடம் மனுக்களை வழங்கினால், பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ், பள்ளிகளில் இருந்து வழங்கப்பட்ட பிறந்த தேதிக்கான சான்றிதழ், பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள 10 ஆம் வகுப்பு, 8 அல்லது 5 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், வங்கிக் கணக்கு புத்தகம், கிசான் புத்தகம், அஞ்சலக கணக்குப் புத்தகம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களின் நகலை அளித்திட வேண்டும்.

தற்போது தமிழகத்தில் உள்ள 8 ஆயிரத்து 95 பொது சேவை மையங்கள், 661 அரசு கேபிள் டிவியின் இ-சேவை மையங்கள், 1001 அரசு கேபிள் மூவியின் கூடுதல் மையங்கள், 97 வாக்காளர் உதவி மையங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் அதிகாரிகள் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களிலும், வாக்காளர் சேர்த்தல் - திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

எனவே, இக்காலகட்டத்திற்குள் தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கும் வாய்ப்பினை, முறையாகவும் கட்டாயமாகவும் பயன்படுத்திக் கொண்டு, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி, வார்டு கட்சி செயலாளர், நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் (BLA-2) ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட, மாநகரகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் சிறப்பு அக்கறையோடு கட்சி அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்திடக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பணி குறித்து கட்சி நிர்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை கட்சித் தலைமைக்கு அவ்வப்போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.