India

”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!

ஈரான் - இஸ்ரேல் அமெரிக்கா இடையே நடந்து வரும் போரின் காரணமாக தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்தான ஹோர்மூஸ் நீரிணையை மூடியுள்ளது ஈரான்.

இதன் காரணமாக உலக நாடுகளில் கடும் எண்ணெய் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்டவை நிலவி வருகின்றன. இதற்கு இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள் அதிகம் விலை கொடுக்க வேண்டியதாய் உள்ளது. இருப்பினும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போர்ச் சூழலில் கையாளப்பட வேண்டிய வெளியுறவுக் கொள்கைகள் போன்றவற்றில் ஒன்றிய பாஜக அரசு கடும் தோல்வியை சந்தித்துள்ளது. 

முக்கியமாக தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சிலிண்டர் விலையை ஏற்றாமலும், சிலிண்டருக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லையென பம்மாத்து காட்டி மக்களை ஏமாற்றி வந்தது. 

தற்போது 5 மாநிலத் தேர்தல்களும் நிறைவடைந்து 1 வாரம் கூட ஆகாத நிலையில் வணிகப் பயன்பாடு சிலிண்டர்கள் விலையேற்றம் காணத் தொடங்கியுள்ளன. புதிய விலையேற்றத்தின்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 990.50 ரூபாய் உயர்ந்து 3,237 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ. 3071.50-ஆகவும், கொல்கத்தாவில், ரூ. 3205-ஆகவும், மும்பையில் ரூ .3024-ஆகவும் விற்பனையாகிறது.

வணிகப்பயன்பாடு சிலிண்டர்களின் விலைதான் ஏற்றம் கண்டுள்ளது, வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என கூறப்பட்டாலும், அடுத்தது அங்குதான் ஒன்றிய அரசின் கவனம் திரும்பும் என மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையேற்றத்தால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டுள்ள நிலையில், இதனால் மறைமுகமாக மக்களும், நேரடியாகவே உணவகங்களின் உரிமையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இன்று (மே 1) முதல் எரிவாயு விநியோக விதிகளும் மாற்றத்திற்குள்ளாகியுள்ளது. இனிமேல், சிலிண்டர் விநியோகிக்கப்படும்போது வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் மோசடியான சிலிண்டர் விநியோகங்களையும் முறைகேடுகளையும் தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி தேர்தலுக்காக நாடகம் நடத்தும் பாஜக அரசு மக்கள் மீது எந்தக் கவலையும் இல்லாமல் தற்போது விலையேற்றத்தை அரங்கேற்றியுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

Also Read: ”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!