India
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை உலகளவில் பெரும் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட விலைமதிப்புள்ள உலோகங்களாகும். இவற்றின் விலை ஒரு நாட்டின் உள்நாட்டு சந்தையில் மட்டுமல்லாது, சர்வதேச சந்தையிலும் தீர்மானிக்கப்படுகிறது.
பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை லண்டன் புலியன் மார்க்கெட் அசோசியேஷன் (London Bullion Market Association - LBMA), COMEX (Commodity Exchange) போன்ற பரிவர்த்தனை மையங்களில் நிர்ணயிக்கப்படுகிறது.
இவற்றின் விலை தினசரி வாங்கும் மற்றும் விற்கும் அளவு (Demand & Supply) அடிப்படையில் மாறுகிறது. உலகளாவிய அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்தால், குறிப்பாக மத்திய வங்கிகள், முதலீட்டாளர்கள், நகை உற்பத்தியாளர்கள் வாங்கும் அளவு உயர்ந்தால், தங்கத்தின் விலை தானாகவே உயரும். அதேபோல், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தால் தங்கத்தின் விலை உயர்வது வழக்கம். ஏனெனில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அது பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
உலகில் பொருளாதார குழப்பம், போர்கள், பங்குச் சந்தை சரிவுகள் போன்ற சூழ்நிலையில் மக்கள் பணத்தை வங்கிகளில் வைப்பதற்குப் பதிலாக தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். உலகளாவிய பொருளாதார சரிவு நேரங்களில், அதாவது 2008-ம் ஆண்டில் நிகழ்த்த உலகளாவிய நிதி நெருக்கடி, COVID-19 காலம் போன்றவற்றால் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது.
அதிலும் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறநாடுகள் மீது விதிக்கும் வரி விதிப்பின் காரணமாக டாலரின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. இதனால் சீனா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை வாங்கிக் குவிகின்றன. இது தவிர பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் கூட தங்கள் நாணய மதிப்பை நிலைநிறுத்த தங்கத்தை சேமித்து வைத்திருக்கின்றன. இது போன்ற காரணங்களே சமீபத்தில் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
வெள்ளியின் விலை நிர்ணயமும் இதேபோலவே. ஆனால் வெள்ளி தொழில்துறை உற்பத்தி, மின்னணு சாதனங்கள், சோலார் பேனல்கள் போன்ற துறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே உலகளாவிய தொழில்துறை வளர்ச்சி, உற்பத்தி விகிதம், மற்றும் பங்குச் சந்தை நிலை ஆகியவை வெள்ளி விலையை நேரடியாக பாதிக்கின்றன.
மேலும், ரூபாய்–டாலர் இடையே நிகழும் மதிப்பு மாற்றமும் இந்தியாவில் தங்கம், வெள்ளி விலைக்கு முக்கிய காரணமாகும். அதாவது உலகளவில் தங்கத்தின் விலை டாலர் மதிப்பிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தால் அதன்மூலம் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரிக்கும், ரூபாயின் மதிப்பு அதிகரித்தால் தங்கத்தின் விலையும் குறையும்.
இந்தியாவில் தங்கம் பொருளாதாரத்திலும், மக்கள் வாழ்க்கை முறையிலும் நிலைத்த செல்வத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்தியர்கள் உலகளவில் மிக அதிக அளவில் தங்கம் வாங்கும் மக்களாக உள்ளனர். அதாவது வருடத்திற்கு சுமார் 700–800 டன் தங்கம் இந்தியர்கள் வாங்குகின்றனர் என்பது உலக சாதனையாக திகழ்கிறது. திருமணங்கள், விழாக்கள், மற்றும் மதச்சார்ந்த நிகழ்வுகள் ஆகியவை தங்கத்தின் தேவை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் மக்கள் வாங்கும் மனோபாவம் குறைவதில்லை.
ஆனால், சமீப ஆண்டுகளில் தங்க விலை தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறன் குறைந்துள்ளது. பலர் சிறிய நகைகள், தங்க நாணயங்கள் அல்லது தங்க சேமிப்பு திட்டங்கள் (Gold Savings Schemes) மூலம் மட்டுமே முதலீடு செய்கின்றனர். மேலும், டிஜிட்டல் தங்கம் மற்றும் சவரின் கோல்ட் பாண்டுகள் (SGB) போன்ற மாற்று வழிகளும் இந்திய மக்களிடையே பிரபலமாகி வருகின்றன.
இன்றும் உலகளவில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை “பாதுகாப்பான முதலீடு” எனக் கருதுகின்றனர். குறிப்பாக தங்கம் “Safe Haven Asset” என அழைக்கப்படுகிறது. அதாவது, பொருளாதார அல்லது அரசியல் நிலைமை சீர்குலைந்தாலும் தங்கத்தின் மதிப்பு குறைவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 300% அதிகரித்துள்ளது. தற்போதைய உலகளாவிய அளவில் பொருளாதார நெருக்கடி தொடர்வதால் இது வரும் காலங்களிலும் அதிகரிக்கவே செய்யும்.
எனவே தங்கத்தில் முதலீடு என்பது பாதுகாப்பானது என்பது தவிர, லாபம் ஈட்டித்தருவதுமாகும். தங்கத்தை நகைகளாக வாங்குவதை விட தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்வது அதிக லாபத்தை பெற்றுதரும். தற்போது ஏராளமான நிறுவனங்கள் தங்க திட்டங்களை தருகிறது என்றாலும், அரசின் பொதுத்துறை வங்கிகளில் கிடைக்கும் தங்கப்பத்திரங்கள் பாதுகாப்பானது. தங்கம் ஒரு நிலைத்த முதலீட்டு கருவி என்பதால் அதில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்தால் அது நம் முதலீட்டை பல மடங்காக்கி திருப்பி தரும் என்பது உறுதி.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!