India

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்... எல்லை மாநிலங்களில் மீண்டும் பதற்றம் !

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். அதோடு ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம் சாட்டிய இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.

எனினும் பாகிஸ்தானின் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதோடு பாகிஸ்தானின் ராவல்பிண்டி, கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதன் காரணமாக இந்த தாக்குதல் போராக உருப்பெறுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், தற்போது நடத்தப்படும் இந்த தாக்குதலை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனிடையே மாலை 5 மணி அளவில் இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்திருந்தார்.

ஆனால் இரவு 8.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகளை வைத்து இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. அதோடு பாகிஸ்தானின் டிரோன்கள் இந்திய பகுதியில் பறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே "தாக்குதல் நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கை இப்போது என்ன ஆனது? ஸ்ரீநகர் முழுவதும் வெடிச் சத்தம் கேட்கிறது"என ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா பதிவிட்டுள்ளது பாகிஸ்தான் தாக்குதலை உறுதி படுத்தியுள்ளது.

Also Read: தேசம் காக்கும் போரில் தமிழ்நாடு எப்போதும் முன் நிற்கும்... - முதலமைச்சர் தலைமையில் பிரம்மாண்ட பேரணி!