India

வெறுப்பு வேண்டாம் என்றவர் மீதும் வெறுப்பு! : பகல்காம் தாக்குதலையடுத்து பிரிவினையை வளர்க்கும் அவலம்!

இந்தியாவின் பதற்றம் மிகுந்த பகுதியாக அறியப்படும் ஜம்மு - காஷ்மீரில், சட்ட ஒழுங்கை மீறி தாக்குதல் நடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல நிலைகளில் அதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சில குழுக்கள் காரணமாக இருக்கின்றன. இதற்கு பாகிஸ்தான் அரசும் துணைபோகிறது என்ற கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

இந்த வஞ்சிப்பை தடுக்க வேண்டி, பணியமர்த்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு பணியாளர்கள் சிலர் கூட, அப்பகுதி மக்களை பல நிலைகளில் வஞ்சித்து வருவதும் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22 அன்று சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தானிலிருந்து இந்தியர்களும் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இந்திய அளவில் வலதுசாரி சிந்தனையாளர்கள் பலர், தீவிரவாத தாக்குதலுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும், காஷ்மீரிகளும்தான் காரணம் என்ற வகையில் சித்தரித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனைக் கண்டு வருத்தமடைந்த ஹிமான்ஷி, (பகல்காம் தாக்குதலில் உயிரிழந்த இந்திய கடற்படை வீரரின் மனைவி) “பகல்காம் தாக்குதலுக்கு தொடர்பில்லாத இஸ்லாமியர்கள், காஷ்மீரிகள் மீது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டாம்” என செய்தியாளர்களை சந்தித்தபோது வலியுறுத்தினார்.

அதனையடுத்து, வெறுப்பு வேண்டாம் என வலுயுறுத்திய ஹிமான்ஷி மீதும் பலர் வெறுப்பை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால், இந்தியாவில் பிரிவினையை வளர்க்க வேண்டும் என்று செயல்படும் சில குழுக்களின் நோக்கம், வெற்றியடைய தொடங்கியுள்ளது.

இதற்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய, ஒன்றிய அரசோ அமைதியாக இருந்து வேடிக்கைப் பார்ப்பது, சிறுபான்மையினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,12,998 கோடி கடன் - சாதனை படைத்த தமிழ்நாடு அரசு !