India
உணவு, சம்பளம் வழங்காமல் சித்ரவதை : ஓமனில் இருந்து படகில் தப்பி வந்த தமிழக மீனவர்கள் கர்நாடகாவில் கைது!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மல்பே பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. மல்பே அருகே நடுக்கடலில் செயின்ட் மேரீஸ் தீவு அமைந்துள்ளது. இந்த நிலையில் மல்பே பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகில் மீன்பிடிக்க அரபிக்கடலுக்கு சென்றனர். அப்போது செயின்ட் மேரீஸ் தீவு அருகே ஓமன் நாட்டு படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. டீசல் இல்லாததால் அந்த படகு நடுக்கடலில் தத்தளித்தது தெரியவந்தது.
இதுபற்றி மீனவர்கள் உடனடியாக கர்நாடக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர காவல் படையினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஓமன் நாட்டு படகில் ஏறினர்.
இதையடுத்து அந்த படகில் இருந்த 3 பேரை பிடித்து கடலோர காவல் படையினர் விசாரித்தனர். அப்போது அவர்கள் தமிழ்நாடு ராமநாதபுரத்தை சேர்ந்த ஜேம்ஸ் பிராங்கிளின் மோசஸ் (வயது 50), டெரோஸ் அல்போன்சோ (38), திருநெல்வேலியை சேர்ந்த ராபின்ஸ்டன் (50) என்பது தெரியவந்தது. அத்துடன் அவர்கள் ஓமன் நாட்டில் மீனவர்களாக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த அவர்கள் 3 பேரும், ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். மீனவர்களான இவர்கள், அங்கு மீன்பிடித்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் வேலை பார்த்து வந்த ஓமன் நாட்டை சேர்ந்த படகு உரிமையாளர், 3 பேருக்கும் சம்பளம் மற்றும் உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்துள்ளார். அத்துடன் 3 பேரின் பாஸ்போர்ட்டுகளையும் வாங்கி வைத்து கொண்டு கொடுக்காமல் மிரட்டியும் வந்துள்ளார்.
இதனால் அவர்கள் 3 பேரும் தங்கள் உயிருக்கு பயந்து உரிமையாளருக்கு சொந்தமான படகில் தப்பி செல்ல முடிவு செய்தனர். அதன்படி 3 பேரும் மீன்பிடிக்க செல்வதாக கூறி உரிமையாளரின் படகை எடுத்து கொண்டு ஓமனில் இருந்து கடல் மார்க்கமாக தப்பி வந்தனர். அவர்கள் ஓமன் துறைமுகத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடல் வழியாக பயணித்து இந்திய கடல் பகுதியை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கார்வாரை கடந்து மல்பே அருகே செயின்ட் மேரீஸ் தீவு பகுதியில் வந்தபோது, படகில் டீசல் தீர்ந்துள்ளது. இதனால், நடுக்கடலில் அவர்கள் டீசல், உணவு இன்றி பரிதவித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மீன்பிடிக்க சென்ற உள்ளூர் மீனவர்கள் வெளிநாட்டு படகை பார்த்ததும், கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்து 3 பேரையும் மீட்டுள்ளனர்.
இதையடுத்து கடலோர காவல் படையினர் ஓமன் நாட்டு படகை பறிமுதல் செய்தனர். மேலும், பாஸ்போர்ட்டு மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டு படகில் எல்லையை தாண்டியதாக கடலோர காவல் படையினர் வழக்குப்பதிவு செய்து, தமிழக மீனவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி மங்களூரு சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாத அன்புமணி ராமதாஸ்!” : சான்றுகளுடன் பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்!
-
”Tamil Nadu Rising மட்டுமல்ல Tamil Nadu will keep on Rising” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”மின் வாகனங்களின் தலைநகரம் தமிழ்நாடு” : பெருமிதத்துடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.32,554 கோடி முதலீட்டில் 49,845 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலீட்டாளர்கள் மாநாட்டின் சிறப்புகள் என்ன?
-
முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டம் : சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் சிறந்து விளங்கும் தமிழ்நாடு!