India
“பொங்கல் - தமிழர்களின் வரலாற்று அடையாளம்!” : நெட் தேர்வு குறித்து அமைச்சர் கோவி. செழியன் கடிதம்!
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (NTA) அதன் UGC - NET தேர்வை பொங்கல் திருநாள் நாட்களில் நடத்தப்படுவதை மாற்றியமைத்திட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கடிதம் எழுதியுள்ளார்.
இக்கடிதத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (NTA) அதன் UGC – NET தேர்வை 3 ஜனவரி 2025 முதல் 16 ஜனவரி 2025 வரை நடத்த அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அனைத்துத் தமிழ் சமுதாய மக்களாலும் கொண்டாடப்படும் விழா பொங்கல் திருநாள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 2025, 13 ஆம் தேதி போகி பண்டிகையும், 14 ஆம் தேதி பொங்கல் (தமிழ்ப் புத்தாண்டு) பண்டிகையும், ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாகவும் (மாட்டுப் பொங்கல்) ஜனவரி 16 ஆம் தேதி உழவர் திருநாள் / காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த நான்கு நாட்களும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த விழாவை முன்னிட்டு தமிழக அரசு ஏற்கனவே 2025 ஜனவரி 14 முதல் 16 வரை விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு விவசாயிகளின் உணர்வார்ந்த திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் ஒரு பண்டிகை மட்டுமல்ல, 3,000 ஆண்டுகளுக்கும் மேலான தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகும்.
பொங்கல் திருநாளைப் போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மகர சங்கராந்தி விழா ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொங்கல் விடுமுறை நாட்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டால், மாணாக்கர்கள் இத்தேர்வுக்கு தயாராவதற்கும் எழுதுவதற்கும் தடை ஏற்படும்.
மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுத்த வேண்டுகோளின்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 2025க்கான பட்டயக் கணக்காளர்கள் அறக்கட்டளைத் தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திடும் வகையில் பொங்கல் திருநாள் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி - நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை வேறு தேதிகளில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?