India

”சிறையில் இருக்க வேண்டிய அதானியை பாதுகாக்கும் மோடி அரசு” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஒன்றிய பா.ஜ.க அரசின் ஆதரவுடன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் புரூக்ளீன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது மற்றொரு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டுதான் அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் நடக்கின்றன என அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்கிற ஆய்வு நிறுவனம் வெளிச்சம்போட்டு காட்டியது. இது குறித்து SEBI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால், SEBI தலைவரும் அதானி குழுமத்தில் பங்குதாரர்தான் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது. இது வரை இந்த முறைகேடு குறித்து ஒன்றிய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில்தான், இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் சோலார் நிறுவனம் தொடங்க, அதானி குழுமத்தால் பல கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்தாக அதானி நிறுவனத்தின் அமெரிக்காவின் புரூக்ளீன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி அதானிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அதானியை கைது செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ” தன்மீதான குற்றச்சாட்டுகளை நிச்சயம் அதானி ஒப்புக்கொள்ள மாட்டார். இருப்பினும் அவர் கைது செய்யப்பட வேண்டும். சிறிய குற்றச்சாட்டுகளுக்காக 100க்கும் மேற்பட்டோர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் அதானி மீது அமரிக்கா ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. எனவே அவர் கண்டிப்பாக சிறையில் இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அவரை பாதுகாத்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: மர்மமான முறையில் பெற்ற வெற்றியை மோடி சொந்தம் கொண்டாட முடியாது! : முரசொலி தலையங்கம்!