India

கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் நந்திகாமா பகுதியில் ஆல்வின் பார்மா நிறுவனம் அமைந்துள்ளது. இங்கிருக்கும் கட்டடம் ஒன்றில் நேற்று திடீரென தீப்பற்றிக்கொண்டது. அந்த சமயத்தில் இந்த தீ விபத்தை கண்ட 17 வயது சாய் சரண் என்ற சிறுவன், இதுகுறித்து பலருக்கும் தெரியப்படுத்தினார். தொடர்ந்து இந்த தீ விபத்துக் குறித்து போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அவர்கள் வருவதற்காக காத்திருக்க முடியாது என்று எண்ணிய சிறுவன், அந்த கட்டடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டிருந்தவர்களையும் மீட்கும் முயற்சியில் அவரே இறங்கினார். அதன்படி அந்தக் கட்டடத்தின் மேலே ஏறி, கயிறின் உதவியோடு ஜன்னலின் வழியாக உள்ளே சிக்கியிருந்த 50 தொழிலாளர்களும் வெளியேற உதவினார்.

சிறுவன் காப்பாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் அவருக்கு உதவி செய்தனர். சிறுவனின் சாதுரியம் மற்றும் துணிச்சலால் தீ விபத்தில் யாருடைய உயிருக்கும் சேதாரம் இல்லாமல் போனது. தொடர்ந்து அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுவன் சாய் சரணுக்கு அங்கிருந்தவர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் சிறுவனின் அசாதாரமான செயலுக்கு தீயணைப்பு வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதி மக்களும் சிறுவனுக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். சிறுவன் தொழிலாளர்களை மீட்பது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி 'ரியல் ஹீரோ சாய் சரண்' என்று இணையவாசிகளால் பாராட்டுகள் பெற்று வருகிறது.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து அதிகாரி கூறுகையில், "பார்மா நிறுவனத்தின் கட்டடத்தில் தீ விபத்து என்று எங்களுக்கு அழைப்பு வந்ததும், உடனே 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் ஸ்டோர் இருக்கும் குடோனில் இருந்து தீ பரவியிருக்கிறது.

இந்த தீயானது, அங்கு கட்டட வேலை நடக்கும் இடத்தில் வெல்டிங் பணிகளின்போது ஏற்பட்ட தீப்பொறி மூலம் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!