India

அரசுத் தேர்வுகளின் வழி மக்களை அலைக்கழித்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கும் பா.ஜ.க!

உலக அளவில், மிகப்பெரிய இளைஞர் பட்டாளம் கொண்ட ஒரு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 65 விழுக்காட்டினர், 35 வயதுக்குட்பட்டவர்கள் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தியாவின் எதிர்காலமாக கருதப்படும், இந்த இளைஞர் பட்டாளத்தின் எதிர்காலம் ‘வேலைவாய்ப்பின்மை’, ‘வருவாயின்மை’ போன்ற சிக்கல்களால், கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கு தீர்வுகாணும் இடத்தில், ஒன்றிய பா.ஜ.க அரசு இருக்கிற நிலையிலும், அதற்கு மாற்றாக, பாழாக்கும் வேலையையே தொடர்ந்து செய்து வருகிறது என பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் கணடனம் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வரிசையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது X - தள பக்கத்தில், “மோடியின் குறிக்கோள் என்பது வேலைவாய்ப்புகளை உண்டாக்குவது அல்ல. அவ்வாறு இருந்திருந்தால், தற்போது நிரப்பப்படாமல் இருக்கும் இலட்சக்கணக்கான பணியிடங்கள் எப்போதோ நிறைவேற்றப்பட்டிருக்கும்.

ஒன்றிய அரசின் தரவுகளின் படி, 78 துறைகளில் சுமார் 9 இலட்சத்து 64 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளன. அதில் இரயில்வே துறையில் 2.93 இலட்சம் பணியிடங்கள், உள்துறையில் 1.43 இலட்சம் பணியிடங்கள், பாதுகாப்புத்துறையில் 2.64 இலட்சம் அடங்கும்.

அதாவது ஒன்றிய அரசின் மொத்த பணியிடங்களில் சுமார் 30 விழுக்காடு பணியிடங்கள் நிரப்பப்படாமல் தான் உள்ளது.

இதற்கு காரணம், பா.ஜ.க அரசு மக்களுக்கு நிரந்தர பணி தர விரும்பாததே. அதற்காகவே, அக்னிபாத் உள்ளிட்ட ஒப்பந்த பணிகளை உருவாக்கி, மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இந்த சிக்கல், ஒன்றிய பா.ஜ.க அரசின் பணியிடங்களில் மட்டும் அல்ல. மாநில பா.ஜ.க அரசின் பணியிடங்களிலும் இதே நிலை தான்.

உத்தரப் பிரதேசத்தில், ஆய்வு அலுவலர்கள் மற்றும் துணை ஆய்வு அலுவலர்கள் பணியில் 411 பணியிடங்களும், துணை நிலை காவலர் பணியில் சுமார் 65 ஆயிரம் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருந்தன. ஆகையால், அப்பணி நிரப்புதலுக்கான தேர்வில், சுமார் 58 இலட்சம் பேர் தேர்வெழுதியிருந்தனர்.

இந்நிலையில், வேலை கிடைத்துவிடும், வறுமை நீங்கிவிடும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த அவர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்குவது போல், "கேள்விகள் கசிவு உள்ளிட்ட காரணங்களால், 58 இலட்சம் பேர் எழுதிய தேர்வுகளை ரத்து செய்து, சில மாதங்களுக்கு பின் மீண்டும் தேர்வு நடத்தப்படும்” என அறிவித்தது, அம்மாநிலத்தின் பா.ஜ.க அரசு.

இது போன்ற குளறுபடிகள், பா.ஜ.க. ஆளும் மற்ற மாநிலங்களிலும் காணப்படும் சூழலில், சரியான வருமானமின்றி தவித்து வரும் வேலையற்ற இளைஞர்களின் நேரங்களையும், முயற்சிகளையும் வீணடிக்கும் பா.ஜ.க.வின் செயல்களுக்கு தேசிய அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Also Read: மூன்றாவது அணியில்லை! பா.ஜ.க.வை மூழ்கடிக்கும் ஒற்றை அணி : நாளுக்கு நாள் மக்கள் ஆதரவுடன் ‘இந்தியா கூட்டணி!’