India

பசுக்களின் தகனத்திற்கு நிதி ஒதுக்கீடு, இறந்த பசுக்களுக்கு கல்லறை - ம.பி பாஜக அரசின் அதிரடி திட்டங்கள் !

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி மிசோரத்தை தவிர 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 163 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடித்தது. இருப்பினும் அந்த மாநிலத்தில் முதலமைச்சர் தேர்வில் கடும் இழுபறி நீடித்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் என்பவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அவர் தலைமையிலான அரசு பதவியேற்றது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பசுப் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தப்பட்டது. இதில் பேசிய முதலமைச்சர், மழைக் காலங்களில் மாடுகள் பிரதான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அமர்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கும் வகையில், பசு காப்பகங்களுக்கு வழங்கப்படும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், இறந்த பசுக்களுக்கு முறையான தகன ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று சொன்னதோடு, இறந்த பசுக்களுக்கு கல்லறைகள் அமைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அமைச்சர்கள் குழு ஆதரவு தெரிவித்ததுடன், இந்த முயற்சியில் சமூக அமைப்புகளை ஈடுபடுத்த பரிந்துரைத்துள்ளது. மத்திய பிரதேச அமைச்சரவையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் சமூக வலைதளத்தின் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறி ஏமாற்றிய பாஜக அரசு : ம.பி-யில் சோகம் !