India

அக்பர்,சீதா சிங்கங்கள் ஒரே இடத்தில் இருக்க இந்துத்துவ அமைப்பு எதிர்ப்பு: நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மையினருக்கு எதிரான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ கும்பலின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

பசு இறைச்சி வைத்துள்ளதாக பொதுமக்கள் அடித்து கொள்வதும், காதலர்கள் ஒன்றாக இருந்தால் அவர்களை அடித்து விரட்டுவதும் என நாட்டில் மதவாத வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. அதன் உச்சமாக விலங்குகள் மீதும் பாஜகவின் மதசாயம் திரும்பியுள்ளது.

மேற்கு வங்கத்தின் சிலிகுரி சஃபாரி பூங்காவுக்கு திரிபுராவில் இருந்து அக்பர் என்ற ஆண் சிங்கமும், சீதா என்ற பெண் சிங்கமும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த இரு சிங்கத்தையும் ஒரே இடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் இதனை எதிர்த்து இந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் தொடரப்பட்டுள்ள மனுவில், "அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா ராமாயணத்தில் ஒரு பாத்திரம். இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார். இந்த நிலையில், இந்த பெயர் கொண்ட இரு சிங்கங்களை ஒரே இடத்தில வைப்பது இந்துக்களின் மனதை வனத்துறை புண்படுத்திவிட்டது. எனவே அவற்றை வேறு வேறு இடங்களில் வைக்கவேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் செய்திகளில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த விவகாரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை விமர்சித்து வருகின்றனர். இதனால் நேற்று முழுவதும் இணையத்தில் இது குறித்த பேச்சே எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை : உயிரோடு தீவைத்து எரித்த கொடூர கும்பல்... ம.பி.யில் அதிர்ச்சி !