India

ராமர் கோவில் விழாவுக்கு எதிர்ப்பு: கைது செய்யப்பட்ட தலித் மாணவர்!

ராமர் கோவில் நிகழ்வு ஜனவரி 22 ஆம் நாள் அரங்கேறியது. அந்த நாளில், மும்பையின் IIPS கல்வி வளாகத்தில் ராமர் கோவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் வெளியாட்கள் உள்பட பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். அரசியல் நிகழ்வாக அது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கு தடை விதிக்க கோரி மாணவர்கள் நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில்,

“IIPS கல்வியகம் என்பது, பன்முகத்தன்மை கொண்டது. இந்த வளாகத்தில் பிள்ளையார் சதுர்த்தி, தசரா மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கள் நடத்துவது வழக்கம். எனினும், ராமர் கோவில் விழா என்பது அரசியல் சார்ந்தது. ஒரு கட்சி சார்ந்தது. வளாகம் முழுமையும் காவியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற விழாக்களை முன்னெடுப்பது, கல்வி நிலைய வரையறைக்கு புறம்பானது,” என எழுதி, 35 மாணவர்கள் கையெழுத்திட்டு, நிர்வாகத்திற்கு அளித்துள்ளனர்.

ஆனால் அக்கடிதம் குறித்து நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாற்றாக கடிதம் எழுதிய மாணவர்களிடம் மன்னிப்பு கடிதமே எழுத கோரியுள்ளது.

இந்நிலையில், தடை கோரிய 23 வயது மாணவருக்கு எதிராக ராமர் கோவில் விழாவை ஒருங்கிணைத்த மாணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மும்பை நகர காவல்துறையும், பெரிய அளவில் விசாரணைகள் மேற்கொள்ளாமல் 153 (அ) மற்றும் 295 (அ) ஆகிய சட்டப்பிரிவுகளில் மாணவரை கைது செய்துள்ளனர். இரு நாட்கள் காவலுக்கு பின், அம்மாணவருக்கு பிணை கிடைத்தது.

கல்வி வளாகத்துக்குள் மத அரசியலை முன்னெடுத்த மாணவருக்கு எதிராக கல்வி நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதை எதிர்த்துக் கேட்டவருக்கு எதிராக நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.

ராமன் ஆண்ட நாட்டில், தவம் புரிவது சட்டவிரோதமாக இருந்தது போல, ராமர் பெயரால் ஆளப்படும் நாட்டில் கேள்வி கேட்பது சட்டவிரோதம் போல!

Also Read: நிதி பங்கீட்டில் வஞ்சனை: வாக்குகளை கொண்டும் மக்களை பிரிக்கும் ஒன்றிய அரசு!