India

ஏழு மாதங்களுக்கு பின்னர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட 87 உடல்கள் : மணிப்பூர் கலவரத்தின் கோரம் !

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்தது.இந்த வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு பின்னர் அங்கு இணையம் மீண்டும் வழங்கப்பட்டபோது சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு காணாமல் போன 20 வயது மாணவனும், அவரின் தோழியான 17 வயது மாணவியும் காட்டில் இறந்த நிலையில் கிடக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் வெளியாகி அங்கு மீண்டும் வன்முறையை பற்றவைத்தது. எனினும் அங்கு தற்போது கலவரங்கள் சற்று குறைந்துள்ளது.

இந்த நிலையில், மணிப்பூரில் சுராசந்த்பூரில் கலவரத்தில் கொல்லப்பட்ட 87 பேரின் உடல்கள் ஏழு மாதங்களுக்கு பின்னர் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. மணிப்பூர் கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூரில் மாவட்டத்தில் ஏழு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கலவரத்தில் சோ, குக்கி பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 87 பேர் கொல்லப்பட்டனர்.

ஆனால், கலவர சூழல் காரணமாக இறந்தவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படாமல் பிணவறையிலேயே வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த சடலங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பலத்த பாதுகாப்போடு நேற்று அடக்கம் செய்யப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தை ஒட்டி மணிப்பூரில் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டன.

Also Read: குறை கண்டுபிடிப்பதில் காட்டும் அக்கறையை ஒன்­றிய அர­சி­டம் நிதி பெறுவதில் பாஜக,அதிமுக காட்டலாம்- முரசொலி!