India

“பொழுதுபோக்கிற்காக உங்கள் மனுவை விசாரிக்கவில்லை”: IAS- IAS அதிகாரிகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பவர் டி ரூபா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அந்த சமயத்தில் சிறைத்துறை டிஐஜியாக டி ரூபா பதவி வகித்தார்.

அப்போது சிறையில் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி வரை அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த சம்பவம் கர்நாடகா, தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் மூலம் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர் ரூபா.

அதே போல் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் ரோகினி சிந்தூரியும் அங்கு பிரபலமானவர். இவர்கள் இருவருக்கும் பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் தொடங்கிய இவர்களது இந்த சண்டை நாட்டின் தலைப்பு செய்தியாகவே வரும் அளவு மோசமாக சென்றது.

கடந்த 2021ல் ரோகினி சிந்தூரி மைசூர் கலெக்டராக இருந்தபொது, ரோகினி சிந்தூரிக்கும், மைசூர் கிருஷ்ணராஜ நகரை சேர்ந்த ஜனதாதளம்(எஸ்) எம்எல்ஏ சாரா மகேஷ் என்பவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது வந்தது. மேலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் உள்ளிட்ட சில குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.

இவர்கள் இருவரும் இருக்கும் போட்டோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, ‛‛ஒரு அதிகாரி அரசியல்வாதியை ஏன் சந்திக்கிறார். சமரசம் செய்கிறார்களா?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார். தொடர்ந்து ரோகினி மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்த ரூபா, அவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வியும் எழுப்பினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக ரோகினியின் சில தனிப்பட்ட புகைப்படங்களையும், அதில் சில ஆபாசமாக இருந்த புகைப்படங்களையும் அப்படியே தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றினார் ரூபா. அதோடு "இந்த படங்களை 3 ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவ்வப்போது ரோகினி சிந்தூரி ஷேர் செய்துள்ளார். இது ஐஏஎஸ் சர்வீஸ் நடத்தை விதிகள் படி குற்றத்துக்குரியது. இதுபற்றி எந்த விசாரணை அமைப்பு வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ரூபாவின் இந்த செயலுக்கு கோபமடைந்த ரோகினி சிந்தூரி இதுகுறித்து பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "மனநோய் என்பது சிகிச்சை தேவைப்படும் ஒரு தீவிரமான பிரச்சனையாகும். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டால் அது மிகவும் ஆபத்தானது. என்னை பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பும் வகையில் சில விஷயங்கள் நடக்கின்றன. அதுதான் அவரது செயல்பாடாகவே உள்ளது. இதற்கு முன்பு அவர் பணியாற்றிய இடங்களிலும் அவதூறு பரப்பும் செயலை அவர் செய்துள்ளார். எனது வாட்ஸ்அப்களில் ஸ்டேட்டஸ் மற்றும் ப்ரோபைல் வைத்த படங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அவர் அவதூறு பரப்புகிறார். ரூபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி ரோகினி சிந்தூரி உச்ச நீதிமன்றத்தில் ரூபா மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளைத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த டிசம்பர் 13 அன்று விசாரணைக்கு வந்தது. “ இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகள் இப்படிச் சண்டையிட்டால் நிர்வாகம் எப்படிச் செயல்படும்.

நீக்கப்பட்ட சோஷியல் மீடியா போஸ்ட்டுகள் குறித்து டிசம்பர் 15-ம் தேதி ரூபா பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும், ரூபாவால் அந்தப் பதிவுகளை நீக்க முடியாவிட்டால், ரோகிணிக்கு எதிரான அறிக்கைகளைத் திரும்பப் பெறுவது குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு பதிவையாவது வெளியிட வேண்டும்.

முழு சர்ச்சைக்கும் முடிவுகட்ட விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் இதை விசாரிக்கிறோம். பொழுதுபோக்கிற்காக உங்களது மனுவை விசாரிக்கிறோம் அல்லது உங்களுக்கு ஆதரவாக நடத்த முயல்கிறோம் என்ற அபிப்ராயத்தில் இருக்க வேண்டாம். நாங்கள் அதற்காக இதைச் செய்யவில்லை. மாநில நிர்வாகத்திற்காக நாங்கள் இதைச் செய்கிறோம்” என்று தீர்ப்பளித்துள்ளனர்.

Also Read: அரசு வேலை வாங்கி தருவதாக இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரிகள் மேல் வழக்குப்பதிவு !