India

பணத்துக்காக கடத்தல் நாடகமாடிய மகன்.. காட்டி கொடுத்த QR CODE.. போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி ?

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசாய் நகர் அமைந்துள்ளது. இங்கு நானிலால் யாதவ் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு 20 வயதில் அங்கித் என்ற மகன் இருக்கும் நிலையில், அவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்த இளைஞர் கடந்த வியாழன்கிழமை திடீரென காணாமல் போயுள்ளார்.

இதனால், அவரது குடும்பத்தினர் அவரது மொபைல் எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது மொபைல் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே அவரது நண்பர்களிடமும் விசாரித்துள்ளனர். அப்போதும் அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை என்பதால் பயந்து போன குடும்பத்தினர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 2 நாட்கள் கழித்து சனிக்கிழமை அங்கித் தனது மாமா மொபைலுக்கு போன் செய்துள்ளார். அப்போது பதற்றமாக தன்னை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திவிட்டதாகவும், ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இதனால் பதறிய குடும்பத்தினர், அந்த பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஒரு QR CODE அனுப்பி, அதற்கு பணத்தை அனுப்பும்படி மாமாவின் வாட்சப் எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து அதனை எடுத்து மீண்டும் காவல் நிலையம் சென்றதையடுத்து அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த QR CODE-க்கு சொந்தமான நபர் சிக்கினார்.

அப்போது அவரிடம் விசாரித்தபோது, அந்த நபர் அப்பாவி என்று தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்ததில் அங்கித்தை கண்டறிந்தனர். இதையடுத்தே அது கடத்தல் நாடகம் என்று போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து அங்கித்திடம் விசாரிக்கையில், தனது பைக்கை சரி செய்வதற்காக தனது தந்தையிடம் பணம் கேட்டதாகவும், அவர் கொடுக்க மறுத்ததால் இவ்வாறு நாடகமாடியதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது தந்தை போலீசிடம் போவார் என்று தான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். பின்னர் பல்வேறு விசாரணைகள் நிறைவடைந்த பின், அவர் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். தற்போது அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பைக்கை சரி செய்ய பணம் வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர், தன்னை யாரோ கடத்தி விட்டதாக நாடகமாடி பணம் பறித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இளம்பெண் கண்ணில் அரிப்பு... பரிசோதனையில் கண்களில் இருந்த 60 உயிருள்ள புழுக்கள் - ஷாக்கான மருத்துவர்கள் !