India

பயிற்சி விமானங்களையே லஞ்சமாக வாங்கிய ஒன்றிய அரசின் அதிகாரி : விமானத்துறையில் நடந்த மாபெரும் ஊழல் ?

கேப்டன் அனில் கில் என்பவர் ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறையின் ஏரோ ஸ்போர்ட்ஸ் இயக்குநரகத்தில் தலைமை இயக்குநராக பணிபுரிந்து வந்தார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் நாட்டில் உள்ள விமான பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்துள்ளது.

அப்போது பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் அளவு பணத்தை லஞ்சமாக பெற்றுவந்துள்ளார் . ஒரு கட்டத்தில் பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து குறைவான தொகைக்கு விமானங்களையே லஞ்சமாக பெற்றுள்ளார்.

பின்னர் அந்த விமானங்களை பயிற்சி நிறுவனங்கள் வாடகைக்கு எடுக்கவேண்டும் என்று சொல்லி ஆண்டுக்கு ரூ.90 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள்ளார். சமீபத்தில் ரெட் பேர்ட் என்ற பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு பயிற்சி விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியது.

இது குறித்து விசாரணை நடைபெற்ற நிலையில், அதில் கேப்டன் அனில் கில் செய்த இந்த மோசடி வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கேப்டன் அனில் கில் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் விமான போக்குவரத்து துறையில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய ஊழலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கமளித்துள்ளார். அதில், "ஊழல் நடந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அனில் கில், அனுமதியின்றி டெல்லியை விட்டு வெளியே செல்லக் கூடாது" என்று கூறியுள்ளார்.

Also Read: "மக்கள் பிரதிநிதிகளுக்குதான் உண்மையான அதிகாரம் இருக்கிறது, ஆளுநருக்கு அல்ல" - உச்சநீதிமன்றம் அதிரடி !