India

மகாராஷ்டிரா : டீ கொண்டுவர தாமதம் - ஆத்திரத்தில் அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்தி வெளியேறிய மருத்துவர் !

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகிலுள்ள மவுடா என்ற இடத்தில் ஆரம்ப சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் எட்டு பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக ராம்டெக் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தெஜ்ரங் பலாவி என்ற மருத்துவர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு அழைக்கப்பட்ட 8 பெண்களுக்கும் வந்த நிலையில், அவர்களுக்கு ஆபரேஷன் தொடங்கப்பட்டுள்ளது.

சுமார் 4 பெண்களுக்கு ஆபரேஷன் முடிந்த நிலையில், மருத்துவர் தெஜ்ரங் பலாவி தனக்கு சோர்வாக இருப்பதால் சூடாக டீ கொண்டுவருமாறு மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் கூறியுள்ளார். ஆனால் சரியான நேரத்தில் அந்த ஊழியரால் டீ கொண்டுவர முடியவில்லை.

இதன் காரணமாக, கடும் கோவமடைந்த மருத்துவர் தெஜ்ரங் பலாவி, வேறு மருத்துவரை வைத்து ஆபரேஷன் செய்துகொள்ளுங்கள் என்று கூறி அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் பதறிய ஆரம்ப சுகாதார மைய நிர்வாகிகள், உடனடியாக மாவட்ட மருத்துவ அதிகாரியைத் தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துக் கூறியுள்ளனர்.

பின்னர் வேறு மருத்துவர் அந்த ஆரம்ப சுகாதார மையத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், மீதம் இருந்த பெண்களுக்கு அந்த மருத்துவர் ஆபரேஷன் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Also Read: காலில் அதிக கொழுப்பு.. அறுவை சிகிச்சை செய்தபோது 4 முறை மாரடைப்பு.. பிரபல இளம் பெண் Influencer பரிதாப பலி!