India

சந்திரசேகர் ராவ் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு : அவசர அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு!

ஆந்திர மாநிலத்திலிருந்து 9 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அந்த மாநிலம் தொடங்கியதிலிருந்து தற்போது வரை பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த சந்திர சேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.

அங்கு இந்த வருடத்தோடு சட்டமன்றத்தின் ஆயுள் காலம் முடிவடையவுள்ள நிலையில், 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவுக்கு, நவம்பர் 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சி இடையே நேரடி மோதல் நிலவுகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஹைதராபாத் அருகே உள்ள தனது பண்ணை வீட்டிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள தேவரகத்ரா பகுதியில் நடக்க இருந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் சென்றார்.

இவர் புறப்பட்ட 20 நிமிடத்திலேயே விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதனை அறிந்த விமானி உடனே விமானத்தைப் பண்ணை வீட்டிற்குத் திருப்பி பத்திரமாகத் தரையிறக்கினார். இதனால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. பின்னர் மற்றொரு ஹெலிகாப்டரில் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றார்.

Also Read: தவறாக பயன்பட்ட Al deepfake video : ஆபாசமாக பரவிய வீடியோ - பயமாக உள்ளதாக ராஷ்மிகா வேதனை !