India

தெலங்கானா அரசு தேர்வு ஒத்திவைப்பு : மன உளைச்சலில் பயிற்சி மாணவி எடுத்த விபரீத முடிவால் வெடித்த போராட்டம்!

தெலங்கானா மாநிலம் ஐதரபாத்தில் அமைந்துள்ளது அசோக் நகர். இங்கிருக்கும் தனியார் விடுதியில் வாரங்கால் பகுதியை சேர்ந்த பிரவிலிகா என்ற 23 வயது இளம்பெண் ஒருவர் தங்கி அரசு தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக இந்த பெண் கடந்த 2 ஆண்டுகளாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த சூழலில் அம்மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் குரூப் II தேர்வு சில காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்த செய்தியால் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்துள்ளார் இளம்பெண் பிரவிலிகா. தொடர்ந்து தனது குடும்ப சூழ்நிலையை நினைத்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தன்னால் வாழ முடியவில்லை என்று தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்காத இளம்பெண் குறித்து அவருடன் தங்கியிருந்த சக பெண்கள் தெரிவிக்கவே, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், இளம்பெண் பிரவிலிகாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கையில் அவர் இறுதியாக எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், "அம்மா, நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் எப்போதும் தோல்வி உணர்வில் சிக்கித் தவிக்கிறேன். நீங்களும், தந்தையும் என்னைப் பற்றி கவலைப்படுவது எனக்கு தெரியும். தயவு செய்து அழாதீர்கள். எல்லோரும் பத்திரமாக இருங்கள்.

உங்கள் மகளாக இருப்பதை நான் அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன். எனது குடும்பத்திற்கு ஒருபோதும் அவமானத்தை ஏற்படுத்தக்கூடாது என்று நான் விரும்புகிறேன். நான் உங்கள் அனைவரையும் ஏமாற்றுவது போல் உணர்கிறேன், இதற்காக என்னை மன்னியுங்கள். உங்கள் இருவருக்கும் உதவ என்னால் இயலாது." என்று உருக்கமாக எழுதியிருந்தார்.

இளம்பெண்ணின் தற்கொலையை அடுத்து தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி வலுத்த கண்டனத்தை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "தெலுங்கானாவில் 23 வயது மாணவி பிரவலிகா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது. இவரது தற்கொலைக்கு காரணம் அம்மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு மற்றும் முறைகேடுகள் தான்.

துக்கமும் கோபமும் நிறைந்த இந்த நேரத்தில், பிரவலிகாவின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். தேர்வுகளை நடத்துவதில் BRS (பாரதிய ராஷ்டிர சமிதி) அரசாங்கத்தின் தரவரிசை அக்கறையின்மை காரணமாக தெலுங்கானாவில் உள்ள ஆயிரக்கணக்கான இளம் ஆர்வலர்கள் விரக்தியும் கோபமும் அடைந்துள்ளனர்.

திறமையற்ற BRS அரசை தெலுங்கானா இளைஞர்கள் பொறுப்புக்கூற வைத்துள்ளனர். அவர்கள் BRS ஆட்சியை மாநிலத்தின் அதிகாரத்தில் இருந்து அகற்றுவார்கள்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, "ஐதராபாத்தில் நேற்று மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இது தற்கொலை அல்ல இளைஞர்களின் கனவுகள், அவர்களின் நம்பிக்கைகளின் கொலை. இன்று தெலுங்கானா இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் சொந்தக்கார கட்சியான பி.ஆர்.எஸ் மற்றும் பாஜக இணைந்து தங்கள் திறமையின்மையால் மாநிலத்தை சீரழித்துள்ளனர்.

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு வேலைக்கு என்று ஒரு காலண்டரை வெளியிட்டு, 1 மாதத்தில் UPSC முறையில் TSPSCயை மறுசீரமைத்து, ஒரு வருடத்திற்குள் காலியாக உள்ள 2 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்பும் - இது உத்தரவாதம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: 5 மாநில சட்டபேரவை தேர்தல் : முதற்கட்ட வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ் !