India

புதுப்பள்ளி இடைத்தேர்தல்.. டெப்பாசிட் இழந்த பா.ஜ.க வேட்பாளர்: மீண்டும் பாடம் புகட்டிய கேரள மக்கள்!

கேரள மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைந்ததை அடுத்து புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனுடன் சேர்ந்து உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்கம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் செப்டம்பர் 5ம்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் கேரளாவில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றார்.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் லிகின் லால் வெறும் 6558 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளார். மேலும் 2011 சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளைக் கூட இடைத்தேர்தலில் பா.ஜ.க பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் உத்தர பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய தொகுதிகளிலும் பா.ஜ.க வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். பா.ஜ.கவின் கோட்டையாக கருதப்படும் உத்தர பிரதேசத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் என பலரும் தொடர் பிரச்சாரம் செய்தும், 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 6 மாநிலங்களில் நடந்த 7 சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

Also Read: ஜி20 மாநாட்டில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத்: உலக நாடுகள் முன்பு இந்தியா பெயரை தவிர்த்த மோடி அரசு!