India

“சார்.. என்னை காப்பாத்துங்க” பைப்பில் தொங்கியபடி அதிகாலையில் போலீஸுக்கு போன் செய்த சிறுமி.. நடந்தது என்ன?

ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் பகுதியில் சிறுமி ஒருவர் அதிகாலை நேரத்தில் போலிஸுக்கு போன் செய்து தான் பைப்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கூறியிருக்கிறார். வேறு எந்த தகவலும் கூறாத அந்த சிறுமியை போலிசார் அலைந்து தேடி வந்தனர். இந்த சூழலில், அவர் போன் செய்த எண் உள்ளிட்டவையை வைத்து அந்த சிறுமி இருக்கும் இடத்தை போலிசார் அரிந்துகொண்டனர்.

பின்னர் சிறுமி இருக்கும் இடமான கோதாவரி ஆற்றின் மேல் இருக்கும் பாலத்தில் தேடினர். அப்போது சிறுமி அந்த பாலத்தில் பிளாஸ்டிக் பைப் ஒன்றை பிடித்தவாறு தொங்கி கொண்டிருந்தார். இதனைக் கண்டதும் அதிர்ந்துபோன போலிசார் உடனடியாக சிறுமியை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து சிறுமியிடம் நடந்தவற்றை குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி தான் பைப்பில் தொங்கியதற்கான காரணத்தை குறித்தும், தனது விவரங்களையும் கூறினார். அதாவது கீர்த்தனா என்ற 13 சிறுமி, தனது தாய் பப்பாலா சுஹாசினி (36) மற்றும் ஒரு வயதுடைய ஜெர்சி என்ற தங்கை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இவர்களுடன் சிறுமியின் தாயின் ஆண் நண்பரான உலவா சுரேஷ் என்ற நபரும் வசித்து வந்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சம்பவத்தன்று அனைவரும் காரில் ராஜமகேந்திரவரம் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ரவுலாபாலம் மேம்பாலம் அருகே கார் வந்தபோது செல்பி எடுக்கலாம் என்று கூறி அந்த நபர் அனைவரையும் கீழே இறங்க கூறியிருக்கிறார்.

அப்போது பாலத்தின் அருகே செல்பி எடுக்க நின்றபோது, அங்கே இருந்து 1 வயது குழந்தை உட்பட 3 பேரையும் பாலத்திலிருந்து ஆற்றில் தள்ளிவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் சிறுமி மட்டும், அந்த பாலத்தில் இருந்த பிளாஸ்டிக் பைப் ஒன்றை இறுக்கமாக பற்றிக்கொண்டு கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால் யாரும் வரவில்லை என்பதால் தனது ஆடையில் செல்போன் இருப்பதாய் உணர்ந்த சிறுமி உடனே அவசர எண் '100'-ஐ தொடர்புகொண்டுள்ளார்.

இதையடுத்தே போலீஸ் நீண்ட தேடுதலுக்கு பிறகு அதிகாலை சுமார் 4 மணியளவில் சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமியின் வாக்குமூலத்தின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் 1 வயது குழந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தப்பியோடிய உலவா சுரேஷையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் 2 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் தான் பைப்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் சிறுமி ஒருவர் அதிகாலை நேரத்தில் போலிஸுக்கு போன் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஒரு தந்தையின் பாசப் போராட்டம்.. உயிருக்கு போராடிய மகள் : படகு உருவாக்கிய தந்தை: நெகிழ்ச்சி சம்பவம்!