India

10 நாட்களாக ABSENT..மணிப்பூர் விவாதத்திற்கு அஞ்சி நடுங்கும் பிரதமர் மோடி: இந்தியா கூட்டணி குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடர் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதன் மீது விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை விவாதத்துக்கு எடுத்தால் அரசு பதிலளிக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன் காரணமாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை விவாதத்துக்கு எடுக்கச் சபாநாயகர் மறுத்துவருகிறார். மாநிலங்களவையிலும் இதே நிலைமைதான் தொடர்கிறது.

தினமும் 60க்கு மேற்பட்ட ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டாலும் விவாதம் மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசு பதிலளிக்கக் கட்டாயம் இல்லாத குறுகிய கால விவாதத்தில் வேண்டுமானால் விவாதிக்கலாம் என்று அரசு தரப்பு கூறுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அரசு தரப்பில் பதிலளிக்காத விவாதம் எதற்கு? மணிப்பூர் வன்முறை உலகையே உலுக்கி உள்ளது. 3 மாதங்களாக அமைதி திரும்பவில்லை. எனவே பிரதமர் அவைக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்பது அனைத்து எதிர்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. அதற்கு இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. பிரதமர் அவைக்கு வர வேண்டும் என்று தன்னால் கூற இயலாது என்று மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் கூறுகிறார்.

அவை தொடங்கிய ஜூலை 20ம் தேதி பிரதமர் மோடி அவைக்கு வந்தார். அதன் பின்னர் பத்து நாட்களுக்கு அவைக்கு பிரதமர் மோடி வரவில்லை. இதனால் நாடாளுமன்றத்தைக் கண்டு பிரதமர் அஞ்சி ஓடுகிறார் என்பது எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாக உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல்நாள் காலை 11 மணிக்கு மட்டும் பிரதமர் அவைக்கு வந்தார். மறைந்த உறுப்பினர்களுக்கு அப்போது இறங்கல் தெரிவிக்கப்பட்டு அவை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் பிரதமர் அவைக்கு வரவில்லை.

அதன் பின்னர் இன்றுவரை கடந்த பத்து நாட்களாக பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. ஆனால் பெரும்பாலான நாட்கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அவருடைய அலுவலகத்துக்குப் பிரதமர் வருகிறார். நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பிரதமரால் ஏன் அவைக்கு வர முடியவில்லை? மணிப்பூர் வன்முறை குறித்து அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியவில்லை? என்பது இந்தியா கூட்டணி எழுப்பும் கேள்வியாக உள்ளது.

Also Read: ”போர்க்குற்றம் செய்த இலங்கை அரசைக் காப்பாற்றியது பா.ஜ.க அரசுதான்” : அமித்ஷாவுக்கு நினைவூட்டிய முரசொலி!