India

8 கோடி கொள்ளையடித்து தப்பியோடிய காதல் ஜோடி.. இலவச ஜூஸுக்கு ஆசைப்பட்டு போலிசில் கிக்கிய பின்னணி என்ன ?

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியை சேர்ந்தவர்கள் மந்தீப் கெளர் - ஜெஸ்வீந்தர் சிங். நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், அண்மையில் திருமணம் செய்துகொண்டனர். இந்த சூழலில் இவர்களுக்கு குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க ஆசை வந்துள்ளது. எனவே அவர்கள் கொள்ளையடிக்க எண்ணியுள்ளனர்.

அதன்படி தன்னுடன் கும்பல் ஒன்றை சேர்த்துக்கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர்கள் திட்டமிட்ட படியே அந்த தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி சுமார் 8 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதையடுத்து இதுகுறித்து அந்த நிறுவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள், இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் 7 பேரை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது மந்தீப் கெளர் - ஜெஸ்வீந்தர் சிங் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர முனைப்பு காட்டி வந்த போதிலும், அவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்த சூழலில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வந்த அதிகாரிகளுக்கு,மந்தீப் கெளர் - ஜெஸ்வீந்தர் சிங் தம்பதி, தற்போது உத்தர்காண்டில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன்பேரில் அங்கு விரைந்த அதிகாரிகள் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள், கேதர்நாத், ஹரித்வார் உள்ளிட்ட கோயில்களில் ஆன்மிக பயணம் செய்துகொண்டிருந்தனர். மேலும் நேபாளம் செல்ல திட்டமிட்ட அவர்களை போலீசார் பொறி வைத்து பிடிக்காமல், ஜூஸ் கொடுத்து பிடித்துள்ளனர். அதாவது, நேபாளம் செல்ல திட்டமிட்டிருந்த அந்த கொள்ளை ஜோடி, நேபாளம் அருகே உள்ள ஷமோலி மாவட்டத்தில் உள்ள சீக்கிய மத வழிபாட்டு தலமான ஹிம்ஹண்ட் ஷாகிப் சென்றனர்.

அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களை பிடிக்க போலீசுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் திட்டம் ஒன்றை தீட்டினர். அதன்படி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசவமாகி ஜூஸ் வழங்கி வந்துள்ளனர். இதனை பெற அந்த ஜோடி வரிசையில் நின்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கண்டறிந்த மாறுவேடத்தில் இருந்த போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து கொள்ளையடித்த ரூ.8 கோடி பணத்தில் ரூ. 6 கோடியை மீட்டுள்ளனர். தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், மீதமுள்ள பணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அரசு வேலை வாங்கி தருவதாக அதிமுக பிரமுகரிடம் லட்சக்கணக்கில் மோசடி.. கைது செய்து அதிரடி காட்டிய போலிஸ் !