India

திருமணத்துக்கு மறுத்த பழங்குடியின இளம்பெண்.. ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த செயலால் அதிர்ந்த காவல்துறை !

ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் ஜோகிதி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான பழங்குடியின இளம்பெண் ஒருவருக்கு அவரின் குடும்பத்தினர் லதேஹர் மாவட்டம் மணிகா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால், இந்த திருமணத்தில் அந்த பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. ஆனாலும் அந்த பெண்ணை வற்புறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி திருமணம் நடத்தி வைப்பதற்கான சடங்குகளை அவரின் உறவினர்கள் செய்துள்ளனர். இதன் காரணமாக அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் அந்த இளம்பெண்ணை அவரின் உறவினர்கள் கண்டுபிடித்து மறுபடியும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும், அதே மணமகனை திருமணம் செய்யுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அந்த பெண் மீண்டும் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவரின் உறவினர்கள் ஊர் பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர்.

பஞ்சாயத்தில் அப்பெண் யாரையோ காதலிப்பதாலேயே உறவினரால் ஏற்பாடு செய்திருந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அந்த பெண்ணுக்கு மொட்டை அடித்து அவரை வனப்பகுதியில் கொண்டுபோய் விடுமாறும் பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அன்று மாலையே அந்த பெண்ணை உறவினர்கள் உள்ளிட்ட ஊர் மக்கள் மொட்டை அடித்து, காம்புகளால் தாக்கி வனப்பகுதியில் சென்று தனியே விட்டு வந்துள்ளனர். அதிகாலை வரை பலத்த காயங்களுடன் வனத்தில் இருந்த அந்த பெண்ணை அங்கு வந்த சிலர் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்படி அந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். மேலும் அந்த பெண்ணின் உடல்நலம் சரியானதும் அவரிடம் வாக்குமூலம் பெற்று கிராமத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘சுழல்’ பட பாணியில் கொடூரம்: சிறுமியை 8 மாத கர்ப்பமாக்கிய சித்தப்பா.. கட்டி வைத்து அடித்த ஊர்மக்கள் !