India

ஜெய் ஸ்ரீ ராம் கோஷம், இந்துத்துவ கும்பல்: கேமரா முன் முன்னாள் MP கொலை விவகாரத்தில் வெளிவரும் பகீர் தகவல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜூபால். இவர் கடந்த 2005ம் ஆண்டு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலைவழக்கில் உமேஷ்பால் என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார். ஆனால் உமேஷ்பாலை மர்ம கும்பல் நாட்டுவெடி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த வழக்கில் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும் ஒருமுறை எம்.பியாகவும் பதவி வகித்த அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரஃப் அகமது ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது இருவரும் செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, அங்கு செய்தியாளர்கள் வேடத்தில் இருந்த மர்ம நபர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அத்திக் அகமதுவும், அவரது சகோதரர் அஸ்ரஃபும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட லவ்லேஷ் திவாரி (22), மோஹித் (23), அருண் மெளா்யா (18) ஆகிய 3 கொலையாளிகளை காவல் துறையினா் கைது செய்தனா். இதில் லவ்லேஷ் திவாரி இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர் என உறுதிசெய்யப்பட்டது.

இந்த வழக்கில் கொலையாளிகள் அளித்த வாக்குமூலத்தில், "அத்திக் மற்றும் அவரின் சகோதரர் அஷ்ரஃப்பின் கும்பலை கொலை செய்து மாநிலத்தில் எங்களுக்கென பெயரையும் அடையாளத்தையும் உருவாக்கிக் கொள்ள நினைத்தோம்" எனக் கூறியுள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையிலேயே இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என்பது தெரியவந்தது. ஆனால் இந்த கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கிகளில் விலை மட்டும் 12 லட்சம் வரை இருக்கும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் துருக்கியை சேர்ந்த 9 எம்எம் ஜிகானா வகையை சேர்ந்த இரண்டு துப்பாக்கியை பயப்படுத்தியுள்ளனர்.

இதன் விலை மட்டும் 12 லட்சம் இருக்கும் நிலையில் அந்த துப்பாக்கிகளை ஏதோ ஒரு பெரிய பிரமுகர்தான் அவர்களுக்கு வழங்கியிருக்க கூடும் என போலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலை செய்யப்பட்டபோது வெளியான வீடியோகளில் கொலையாளிகள் ஆதிக் மற்றும் அவரது சகோதரரைக் கொன்ற பிறகு "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷம் எழுபியதும் தெளிவாக பதிவுசெய்யப்பட்ட நிலையில், இது ஒரு இந்துத்துவ கும்பலில் செயலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இந்த கொலை நடந்தபின்னர் அதே பகுதியை சேர்ந்த பாஜகவினர் பட்டாசு வெடித்து இதனை கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: "பாஜகவுடன் சேர்வது என்பது அரசியல் தற்கொலைக்கு சமம்" - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத் பவார் !