India

அரிசி திருடியதாக கேரள பழங்குடி இளைஞர் கொலை.. - நாட்டை உலுக்கிய சம்பவத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே வசித்து வந்தவர் மது. பழங்குடியின இளைஞரான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த பகுதி கடை ஒன்றில் அரிசி திருடியதாக கூறி கடை உரிமையாளர் தாக்கியுள்ளார். அதோடு அங்கிருந்த பொதுமக்களும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதோடு அந்த பகுதி இளைஞர்கள் அவரை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று கொடூர முறையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதனை வீடியோவாகவும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து மதுவை போலீசிலும் ஒப்படைத்தனர். கடுமயான காயங்களுடன் போலீசார் மதுவை கூட்டி செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் அந்த நபர்கள் மதுவை தாக்கும் வீடியோக்களும் வெளியாகி கடும் கண்டனங்களை எழுப்பியது. தொடர்ந்து இறந்துபோன மதுவின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் ஒரு பருக்கை சாப்பாடு கூட இல்லை என்றும், அவர் பட்டினியால் நீண்ட நாள் வாடியதும் தெரியவந்தது.

இந்த தகவல் வெளியாகி அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் பெரிய பூதாகரமான ஆன நிலையில் இதற்கென தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதோடு இந்த வழக்கில் 3,000 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கு மன்னார்காடு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில், 14 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில் குற்றவாளிகள் 14 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பு மதுவில் குடும்பத்துக்கு ஒரு ஆறுதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட மதுவுக்கு தாய், மற்றும் தங்கை உள்ளனர். மது மனநலம் கொஞ்சம் பாதிக்கப்பட்டவராக கூறப்படுகிறது. எனினும் பழங்குடி இளைஞர் அரிசி திருடியதாக கூறி அடித்தே கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வீட்டின் கழிவறை பக்கெட்டுக்குள் கிடந்த பிஞ்சு குழந்தை.. ஓடி சென்று மருத்துவமனையில் சேர்த்த கேரள போலிஸ் !