India

"படிப்பறிவில்லாத பிரதமர் நாட்டுக்கு ஆபத்து".. குஜராத் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து டெல்லி முதல்வர் ட்வீட்!

இந்திய நாட்டின் பிரதமராக இருந்து வருபவர் நரேந்திர மோடி. இவர் குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார். மேலும் பா.ஜ.க கட்சியின் முக்கிய பதவிகளிலும் நரேந்திர மோடி இருந்துள்ளார்.

2014 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கு முந்தைய குஜராத் மாநில தேர்தல்களில் 1978ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பையும், 1983ம் ஆண்டு முதுகலை படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்ததாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 2016 ம் ஆண்டிலிருந்து அவரது பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது. பிரதமர் சான்றிதழை வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.

இதில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு ஆவணத்தை வெளியிடுமாறு தலைமை தகவல் ஆணையருக்குக் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை அடுத்து, தலைமை தகவல் ஆணையர் குஜராத் பல்கலைக்கழகமும் பிரதமர் அலுவலகத்தின் தகவல் தொடர்பு பிரிவும் பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ் குறித்த விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கு எதிராகக் குஜராத் பல்கலைக்கழகம் சார்பாகக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில், தலைமை தகவல் ஆணையர் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வழங்கப் பிறப்பித்த உத்தரவைத் தள்ளுபடிசெய்தும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆவணங்களை வழங்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை அடுத்து "பிரதமர் எவ்வளவு படித்துள்ளார் என்பதை அறியும் உரிமை கூட நாட்டிற்கு இல்லையா?. பட்டப்படிப்பைப் பார்க்கக் கோருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? இங்கு என்ன நடக்கிறது?. படிப்பறிவில்லாத அல்லது குறைவான கல்வியறிவு பெற்ற பிரதமர் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவர்" என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த ட்வீட் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: OTT தளங்களில் ஏற்படும் புதிய மாற்றங்கள்.. அமேசானுடன் இணையும் HBO.. விலகும் மற்றொரு நிறுவனம் ?