India

சத்தத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரம்.. தந்தை-மகனை கொடூரமாக தாக்கிய பாஜக MLA சகோதரர்..குஜராத்தில் பரபரப்பு!

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள சாவ்லி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கேடன் இனாம்தார். பாஜகவை சேர்ந்த இவருக்கு சந்தீப் இனாம்தார் என்ற சகோதரரும் இருக்கிறார். இவர்கள் வசிக்கும் பகுதியில் அணில் மிஸ்திரி (வயது 56 ) என்பவர் சொந்தமாக கடை வைத்து தச்சு தொழில் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஹோலி பண்டிகையான மார்ச் 8ஆம் தேதி அன்று அனில் மிஸ்திரியின் மூத்த மகன் சிந்தன் வழக்கம்போல கடைக்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கு பாஜக எம்.எல்.ஏ-வின் சகோதரர் சந்தீப் பாஜகவினரோடு சேர்ந்து சாலையில் நடனமாடிக்கொண்டிருந்துள்ளார்.

இவர்களின் இந்த பாட்டு சத்தம் கடையில் வேலைசெய்துவந்த சிந்தனுக்கு இடையூறாக இருந்ததால் எம்.எல்.ஏ-வின் சகோதரர் சந்தீப்பிடம் சென்று பாட்டு சத்தத்தை குறைத்து வைக்குமாறு கூறியுள்ளார். இதற்கு சந்தீப் மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சந்தீப் தனது கட்சிகாரர்களோடு சேர்ந்து சிந்தனை நடுரோட்டில் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்த தப்பிய சிந்தன் தனது தந்தை அணில் மிஸ்திரியிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அவரும் வந்து சந்தீப்பிடம் பேசியநிலையில், அவரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது.

உடனே அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர் சந்தீப்பையும், அவரின் கூட்டாளிகளையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், அணிலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவரின் கை, கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதும், கண்ணில் பார்வை பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அணில் மிஸ்திரி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக எம்.எல்.ஏ-வின் சகோதரர் சந்தீப் மற்றும் அவரோடு இருந்தவர்கள் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர. மேலும்,அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "இதயம் இருக்கிறது என்றால் போதாது.. அது அடுத்தவர்க்கும் தெரியவேண்டும்!" -தமிழிசையை விமர்சித்த முரசொலி !