India

வயிறு வலியால் துடிதுடித்த சிறுமி.. பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள் !

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது குடிவாடா என்ற பகுதி. இங்கு 12 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே வயிறு வலி இருந்துள்ளது. மேலும் வாந்தி, உடல் எடை, சாப்பாட்டின்மை போன்ற குறைபாடுகள் இருந்துள்ளது. இதனால் அவரது குடும்பம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது அவரது வயிற்றில் கருப்பாக எதோ கட்டி போல் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்துள்ளது. எனவே அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கட்டி தான் என்று எண்ணிய மருத்துவர்களுக்கு பெரிய அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரது வயிற்றுக்குள் முடி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த முடிகளை அகற்றினர். அதனை முழுவதுமாக அகற்றிவிட்டு எடை போட்டு பார்த்தபோது, சுமார் 1 கிலோ வரை அந்த முடியின் எடை இருந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "சிறுமிக்கு ‘டிரைக்கோபெசோர்’ என்று அழைக்கப்படும் தலைமுடி சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளதாக தெரிகிறது.

சிறுமி தனது சிறுவயதில் இருந்தே இதனை சாப்பிட பழகியுள்ளார். அது தற்போது அவரது வயிற்றில் குவிந்து செரிமான மண்டலத்தில் ஒரு பெரிய கட்டியாக உருவாகி, செரிமான மண்டலத்தை நிரப்பி உள்ளது. இதனால்தான் அவர் சாப்பிட்ட சாப்பாடு எதுவும் அவருக்கு செரிக்காமல் இருந்துள்ளது. அதோடு அவருக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.

தற்போது சிறுமி நலமுடன் இருக்கிறார். அவரது வயிற்றில் இருந்த முடிகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் இந்த மாதிரியான தலைமுடி சாப்பிட பழக்கி கொள்வதால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்." என்றார். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று பல்வேறு இடங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது. அண்மையில் சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவர், மன நோய் பிரச்னை காரணமாக தனது முடியை தானே சாப்பிட்டு அவரது வயிற்றில் இருந்து சுமார் 3 கிலோ எடை வரை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “சாப்பாட்டுக்கு கூட வயிற்றில் இடமில்லை..” -உணவு குழாயை அடைத்த 3 கிலோ முடி: சிறுமிக்கு ஏற்பட்ட விநோத நோய்!