India

“இந்திய பொருளாதார வளர்ச்சி மிகவும் பலவீனமாக இருக்கிறது” : மோடி அரசை எச்சரித்த RBIஇன் MPC உறுப்பினர்!

நாட்டின் சில்லரைப் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவிகிதத்திற்குள் வைத்துக் கொள்ள வேண்டியது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். இருப்பினும், நவம்பர் மாதத்திற்கு முன்பு வரை கடந்த 10 மாதங்களாகப் பணவீக்கம் 6 சதவிகிதத்திற்கும் அதிகமாகவே இருந்தது. இப்போதுதான் அது இலக்குக்குள் வந்துள்ளது.  

இதனிடையே, கடந்த 3 காலாண்டுகளாகப் பணவீக்கம் ஏன் 6 சதவிகிதத்திற்கும் அதிகமாகவே இருந்தது? என்பதை விளக்கி, ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், தற்போதைய நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் பலவீனமாக உள்ளதாக ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (Monetary Policy Committee -MPC) உறுப்பினரும், அகமதாபாத் ஐ.ஐ.எம் கல்வி நிறுவன பேராசிரியருமான ஜெயந்த் ஆர்.வர்மா தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அகமதாபாத் ஐ.ஐ.எம் கல்வி நிறுவன பேராசிரியர் ஜெயந்த் ஆர்.வர்மா கூறுகையில், “ஏற்றுமதி, அரசு செலவுகள், முதலீடு மற்றும் தனியார் நுகர்வு ஆகியவற்றை பொருளாதார வளர்ச்சியை இயக்கும் நான்கு என்ஜின்கள் என்கிறோம்.

இவற்றில், ஏற்றுமதியைப் பொறுத்தவரை உலகளாவிய மந்தநிலை காரணமாக அதனை அதிகரிக்க முடியாத நிலை உள்ளது. அடுத்ததாக அரசு செலவினம் பல்வேறு காரணங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தனியார் நுகர்வு வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.

அந்த வகையில், பொருளாதார வளர்ச்சி தற்போது மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே, நமது பொருளாதாரத்தைக் காக்க நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று ஜெயந்த் ஆர்.வர்மா கூறியுள்ளார்.

Also Read: “இது பெரிய கேவலம்.. ரபேல் வாட்ச்சை கட்டியிருப்பதற்கு அண்ணாமலை வெட்கப்பட வேண்டும்”: கே.பாலகிருஷ்ணன் சாடல்!