India

3 மாதமாக UnderCover Agent.. ராகிங் செய்யும் மாணவர்களை கண்டுபிடிக்க கல்லூரி மாணவியாக மாறிய பெண் போலிஸ் !

கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவர்களிடம் நட்பாக பழகவும், அவர்களை கல்லூரி வாழ்க்கைக்கு சகஜமாகவும் எப்போதோ ஆரம்பிக்கப்பட்டதுதான் ராகிங் கலாச்சாரம்.. ஆனால் தற்போது அதன் நோக்கமே சிதைக்கப்பட்டு புதிதாக சேரும் மாணவர்களை கொடுமை படுத்தும் நிகழ்வாக அது மாற்றப்பட்டுள்ளது.

சில மோசமான ராகிங் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவும் நிலைமை மோசமாகியுள்ளது. மேலும்,ராகிங்கை தடுக்க பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சில இடங்களில் அது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் ராக்கிங் கொடுமை நடப்பதாக போலிஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கான்ஸ்டபிள் சாலினி சவுகான் (வயது 24) என்ற மகளிர் போலிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதனபடி அவர் புத்தகங்கள் இருக்கும் பேக்கை எடுத்துக்கொண்டு ஒரு மாணவியைப் போல தொடர்ந்து 3 மாதங்கள் கல்லூரிக்கு சென்றுவந்துள்ளார். பின்னர் கல்லூரியில் இருக்கும் உணவகத்தில் ஜூனியர் மாணவர்களிடம் சக மாணவர் போல பேசி அவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து கேட்டுள்ளார். பின்னர் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து தகவல் திரட்டியுள்ளார்.

அதன்படி சாலினி சவுகான் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் போலிஸார் 11 சீனியர் மாணவர்கள் மேல் வழக்கு பதிவு செய்துள்ளனர் . மேலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட 11 மாணவர்களில் 9 பேர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேலும் இந்த பணியில் ஈடுபட்ட பெண் போலிஸ் சாலினி சவுகானுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: "ஏமாற்றிதான் தேர்வில் பாஸ் ஆனேன்,அதில் நான் Ph.D முடித்தவன்" -சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!