India

மனைவியின் சகோதரியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்.. மும்பையில் அரங்கேறிய கொடூரம்.. பின்னணி என்ன ?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள ஜோகேஸ்வரி என்ற பகுதியை சேர்ந்தவர் முகமது ஹிம்மத் சேக். இவருக்கும் நிலோபர் என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு திருமணமானது. திருமணம் முடிந்து இருவரும் சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், முகமது துபாயில் பணிபுரிந்து வந்தார். அப்போதே இருவருக்கும் இடையே சிறு சிறு தகராறு ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த தகராறு முற்றிபோக, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் நிலோபரிடம் விவாகரத்து கேட்டு தொந்தரவு செய்துள்ளார் முகமது. ஆனால் நிலோபர் விவாகரத்து கொடுக்க மறுப்பு தெரிவித்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அவருக்கு கேன்சர் இருப்பதால் துபாயில் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து கடந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்த அவர் வேலையில்லாமல் திண்டாடி வந்துள்ளார். மேலும் அவர் சாப்பாட்டுக்கும், மருத்துவ செலவுக்கும் கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தனது சொத்தை விற்க எண்ணிய முகமது நிலோபரிடம் பத்திரத்தை கேட்டுள்ளார். ஆனா தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வேண்டும் என்று கூறி முகமதுவிடம் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் கடும் கோபத்தில் இருந்த முகமது, சம்பவத்தன்று தனது மனைவியை காண மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். காலையில் சென்ற அவர் வீட்டின் கதவை தட்டவே, உடனே யார் என்பதை அறிய நிலோபர் கதவை திறந்துள்ளார். தனது மனைவி கதவை திறப்பதை அறிந்த முகமது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தாக்க தொடங்கியுள்ளார்.

இதனைக்கண்டதும் மாமியார் மற்றும் மனைவியின் தங்கை தடுக்க முயன்றனர். இதில் இருவருக்கும் கத்தி குத்து ஏற்பட்டு நிலோபரின் தங்கை சனோபர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்தார். அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், முகமதுவை கைது செய்து, சனோபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட முகமது மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஈவ் டீசிங் செய்வதை தட்டி கேட்ட கேரள மாணவிக்கு அடி உதை.. முடிவெட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் !