India

ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டான ராணுவவீரரின் கால்.. டிக்கெட் பரிசோதகர் தலைமறைவு.. நடந்தது என்ன ?

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் சோனு குமார் சிங் (வயது 29). டெல்லியில் பணிசெய்யும் இவர் சொந்த ஊர் வந்துள்ளார். பின்னர் பணிக்கு செல்ல நேரம் வந்ததால் திப்ரூகர்-புது டெல்லி ராஜ்தானி ரயிலில் பயணம் செய்ய பரேலி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

பின்னர் ரயில் வந்ததும் அதில் சோனு குமார் ஏறி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த B6 பெட்டியில் ஏறியுள்ளார். அப்போது இருக்கை தொடர்பாக அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் குபன் போரேவுக்கும் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட தருணத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் குபன், ராணுவ வீரரை ரயிலை விட்டு கீழே தள்ளியுள்ளார். இதில் ரயில் சக்கரத்தில் ராணுவ வீரரின் கால் சிக்கியதில் அவரின் ஒரு கால் துண்டாகியுள்ளது.

உடனே ரயிலை நிறுத்தி அங்கிருந்தவர்கள் ராணுவ வீரரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு பரிசோதனை நடைபெற்றதால் மற்றொரு காலிலும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரின் மற்றொரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக உள்ள ரயில் பரிசோதகரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: முதலைமைச்சரே..-வா? என்னது இது எதோ புதுசா இருக்கே.. : BJP தொண்டர்களின் தமிழறிவை மெய்ச்சும் இணையவாசிகள் !