India

புகைப்பட கலைஞர்களின் கேமராக்களை பறித்து உண்டியலில் போட்ட அதிகாரிகள்.. திருப்பதியில் அதிர்ச்சி !

திருப்பதி கோயிலுக்குள் முறையாக அனுமதியின்றி, புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞர்களின் கேமராக்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அவை உண்டியலில் செலுத்தப்பட்டுள்ள சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசம் மணிலாத்தில் உள்ளது திருப்பதி. இங்கு ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இடமாகும். இங்கு நாளொன்றுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பல லட்சம் பகதர்கள் வந்து செல்வர். எனவே இங்கு வரும் பக்தர்கள் சிலர் கோயில் மற்றும், கோயில் வடிவமைப்புகள் உள்ளிட்டவற்றை புகைப்படங்கள் எடுத்து மகிழ்வது வழக்கம். அதற்காக அவர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது.

மேலும் உள்ளே வரும் பக்தர்களை புகைப்படங்கள் எடுக்கவும், திருப்பதி கோயிலுக்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் தனியே புகைப்பட கலைஞர்கள் உள்ளனர். அதற்கு அவர்களுக்கு தனியே லைசன்ஸும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் லைசன்ஸ் இல்லாமல் சில புகைப்பட கலைஞர்கள் கோயிலுக்குள் இருப்பதாகவும், அவர்கள் பக்தர்களை தொந்தரவு செய்வதாகவும் அந்த கோயிலின் தேவஸ்தான அதிகரிகளிடம் புகார் வந்தது. இதையடுத்து அவர்கள் சோதனை செய்ய முடிவெடுத்தனர்.

அதன்படி தேவஸ்தான அதிகாரிகள் இத்தரக ஸ்ரீவாரி கோயில் வளாகம், லட்டு கவுண்டர், அன்னதான சத்திரம், மாட வீதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைககளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 20-க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்களின் கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட கேமராக்களை அவர்கள் கோயில் உண்டியில் செலுத்தினர். இதனை கண்ட கேமராவுக்கு சொந்தக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். உண்டியலில் செலுத்தப்பட்ட கேமராக்கள் அனைத்தும் தேவஸ்தானம் சார்பில் விரைவில் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும். அவ்வாறு செய்யப்படும்போது கிடைக்கும் தொகை தேவஸ்தான கணக்கில் செலுத்தப்படும்.

இனியும் இது போன்று அனுமதியின்றி புகைப்படங்கள் எடுக்கப்பட்டால், அவர்கள் கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டு உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: ஆங்கிலம் தெரியும், இந்தியில் பேச தெரியாதா? -இந்தி திணிப்பில் ஈடுபட்ட டெல்லி அதிகாரி.. பரபரப்பில் புதுவை !