India

சாலையோர குளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்..26 பேர் பலி..கோவிலுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ஃபதேபூரில் உள்ள சந்திரிகா தேவி கோயிலுக்கு சுமார் 50 பேர் டிராக்டரில் பயணம் செய்துள்ளனர். இந்த ட்ராக்டர் கதம்பூர் எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள குளம் ஒன்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்தை நேரில் கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக களத்தில் இறங்கி காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் படுகாயங்களோடு சிகிச்சை பெற்றுவருவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தின் மூத்த அமைச்சர்கள் ராகேஷ் சச்சன், அஜித் பால் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Also Read: நடுவானில் விமானத்தை துளைத்த துப்பாக்கி குண்டு.. ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பயணிக்கு நேர்ந்த சோகம் !