India

சத்தீஸ்கர் :சம்பள பாக்கியை கேட்ட இளைஞர்.. விமான நிலைய வாசலில் வைத்து கடுமையாக தாக்கிய இளம்பெண்கள் : VIDEO

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்தவர் தினேஷ். தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவருக்கு, அந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக சம்பளத்தை வழங்காமல் இருந்துள்ளது. இதனால் அவர், ராய்ப்பூர் விமான நிலையம் அருகே அமைந்துள்ள அந்த டிராவல்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்றுள்ளார்.

அப்போது அங்கே பணியாற்றி வந்த பெண் ஊழியர்களிடம் தனது சம்பள பாக்கியை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததோடு இந்த இளைஞரை தகாத வார்த்தைகளில் திட்டியும் உள்ளனர். மேலும் அந்த பெண்கள் இவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அவர், அந்த ட்ராவெல்ஸின் மேனேஜர் நம்பரை கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் ஊழியர்கள் நம்பரை தரமுடியாது என்று கூறியதுடன் மீண்டும் கடுமையாக பேசியுள்ளனர். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் அவரை அங்கிருந்த விமான நிலைய வாசலில் வைத்து பெல்ட் கொண்டு அடித்தும், அவரது சட்டையை கழற்றியும் அவரை அவமானப்படுத்தினர். சுமார் 5-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு இளைஞரை தாக்கியதை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்துடன் அந்த நிகழ்வை தங்களது மொபைல் போன்களில் வீடியோவாக எடுத்தனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அந்த பெண் ஊழியர்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தையடுத்து தன் மீது தாக்குதல் நடத்திய பெண்கள் மற்றும் நிறுவனத்தின் மீது தினேஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் டெல்லி உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அடிக்கடி அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பைக்கில் செல்லும்போது திடீரென வெடித்த புதிய செல்போன்.. தீப்பிடித்து சிறுவனுக்கு நேர்ந்த சோகம் !