India

"கழுத்தை அறுத்து சாவேனே தவிர, மிரட்டலுக்கு பயந்து BJP கட்சியில் சேரமாட்டேன்:ஆவேசமான டெல்லி துணை முதல்வர்!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.இங்கு முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வராக மணிஷ் சிசோடியாவும் இருந்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமரிசித்து வருகிறது.

சமீபத்தில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து டெல்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு என குற்றம்சாட்டி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதன் பின்னர் அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஒன்றிய அரசின் இதுபோன்ற சம்பவங்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்தநிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தமது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், "ஆம் ஆத்மியை இரண்டாக பிளவுபடுத்தி பாஜகவில் இணைய வேண்டும், அப்படி செய்தால் அனைத்து வழக்குகளையும் முடித்து விடுகிறோம் என்று கூறினார், ஆனால் நான் மகாராஜா ராணா பிரதாப் வம்சத்தை சேர்ந்தவன். நான் என் தலையை நானே வெட்டிக் கொண்டாலும் வெட்டிக் கொள்வேனே தவிர எவர் முன்பாகவும் தலைகுனிந்து நிற்க மாட்டேன். என் மீதான அத்தனை வழக்குகளும் பொய்யானவை. உங்களால் செய்ய முடிந்ததை செய்து கொள்ளலாம்" என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை குறிப்பிட்டு ஒன்றிய பாஜக அரசின் செயலை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: "மாற்றி மாற்றி பேசுவது மோடியின் குணம் மட்டுமல்ல, அதுதான் பாஜகவின் குணம்" -விவாதத்தில் தெறிக்கவிட்ட PTR!