India

விரைவுச் சாலை அமைப்பதற்காக 500 அடி வீட்டை தள்ளி வைத்த நபர்.. ஆசையாக கட்டிய கனவு வீட்டிற்கு வந்த சோதனை!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்விந்தர் சிங். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சங்ரூரில் உள்ள ரோஷன் வாலா கிராமத்தில் அவருக்குச் சொந்தமான இடத்தில் 2 மாடிகளைக் கொண்ட அழகா வீட்டை கட்டினார்.

இந்த வீட்டைக் கட்டி முடித்து அங்கு வசித்து வந்த பிறகு இந்த முழு வீட்டையும் ஒருநாள் மாற்ற வேண்டியிருக்கும் என்று அவர் ஒரு நாளும் நினைத்திருக்க மாட்டார். ஆனால் தற்போது தனது கனவு வீட்டை 500 அடி தள்ளிவைத்துள்ளார் அவர்.

ஒன்றிய அரசு சார்பில் டெல்லி - அமிர்தசரஸ் - கத்ரா வரை விரைவு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை செல்லும் வழியில்தான் சுக்விந்தர் சிங் வீடு இருந்துள்ளது. இதனால் சாலை அமைப்பதற்கு இந்த வீடு இடையூறாக உள்ளது. இதை இடிக்க வேண்டும். இதற்கான இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்படும் என பஞ்சாப் அரசு சுக்விந்தர் சிங்கிடம் கூறியுள்ளது.

ஆனால் அவர் தனது கனவு வீட்டை இடிக்க மறுத்துவிட்டார். இதற்குப் பதில் வீட்டைத் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளார். இதற்கான செலவை அரசு ஏற்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதையடுத்து தொழில்நுட்ப வசதிகளுடன் 500 அடி தூரத்திற்கு வீடு தள்ளி வைக்கப்பட்டது.

இது குறித்து சுக்விந்தர் சிங், "இந்த வீட்டைக் கட்ட எனக்கு 2 வருடங்கள் ஆனது. இதற்காக ரூ 1.5 கோடி வரை செலவு செய்தேன். இது எனது கனவு வீடு. நான் வேறு வீடு கட்ட விரும்பவில்லை. இதனால் வீட்டைத் தள்ளி வைக்க முடிவு செய்தேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: OPS தனது சித்தப்பாதான்.. பொய் சொல்லி ரூ.1 கோடி மோசடி செய்த நபர்: விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!