India

பில்கிஸ் பானு வழக்கு : "இது நீதியின் கேலிக்கூத்து.." - பாஜக அரசுக்கு அமெரிக்கா ஆணையம் கண்டனம் !

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகனையும் கொடூரமாக கொன்றது.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு அண்மையில் விடுதலை செய்ததது. பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் 11 பேரும் நல்லவர்கள். அதனால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றையும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது USCIRF எனப்படும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்ததுள்ளது.

அதன்படி USCIRF அமைப்பின் துணை தலைவர் ஆப்ரகாம் கூப்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2002 குஜராத் கலவரத்தின் போது கர்ப்பிணி முஸ்லிம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக கொலை செய்ததற்காகவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை நியாயமற்ற முறையில் விடுதலை செய்ததை USCIRF கடுமையாக கண்டிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், USCIRF கமிஷனர், “2002 குஜராத் கலவரத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பொறுப்பேற்கத் தவறியது நீதியின் கேலிக்கூத்து. இது மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியாவில் தண்டனை விதிக்கும் முறையின் ஒரு பகுதியாகும்." என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Also Read: சலூன் கடையில் Facial செய்த சிறுவன்.. ஊழியரின் கவனக்குறைவால் நடந்த கொடூரம்!