India

வெள்ளத்தில் 12 மணி நேர போராட்டம்.. மகளுக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த தாய் ! நடந்தது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தில் உள்ள பதாரியா என்ற பகுதியை சேர்ந்தவர் சோனம். இவருக்கு ஒரு 8 வயது மகள் இருக்கிறார். இவர் ரக்ஷாபந்தன் விழாவை கொண்டுவதற்காக தனது சகோதரருடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

செல்லும் வழியில் ஒரு ஆற்றை கடந்து செல்ல பாலத்தில் சென்றபோது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் ஆற்றில் தவறி விழுந்து சோனம் ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். இதைக் கண்ட அவர் சகோதரர் செய்வதறியாது திகைத்து நின்றார்.

விழுந்த இடத்தில் இருந்து சுமார் கி.மீ அடித்து செல்லப்பட்ட அவர், கஞ்ச் என்ற பகுதியில் இருந்த பாலத்தின் கீழ் இருந்த கம்பியை பிடித்துள்ளார். அந்த கம்பியை பிடித்தபடி இரவு முழுவதும் சுமார் 12 மணி நேரம் இருந்த அவரை மீட்புப்படையினர் கண்டு பிடித்தனர்.

பின்னர் சோனத்தை படகில் மீட்ட மீட்புப்படையினர் அவருக்கு லைப் ஜாக்கெட் அணிவித்து அங்கிருந்து படகில் கரைக்கு கொண்டுவந்த போது படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதில் மீட்பு படையினர் நீந்தி கரையேறிய நிலையில் சோனம் மீண்டும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் ராஜ்கேடா என்ற பகுதியில் மரம் ஒன்றில் உயிரோடு சிக்கிய அவரை அந்த பகுதியில் இருந்த கிராமத்தினர் உதவியோடு மீட்பு படையினர் மீட்டுள்ளனர். இது குறித்து பேசிய அந்த பெண், தான் இறந்து விட்டால் தனது 8 வயது மகனின் எதிர்காலம் என்னவாகும் என நினைத்தே விடாப்பிடியாக அந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்ததாக கூறினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: மோடி பழைய வாக்குறுதியே நிறைவேற்றல, இதில் புதிதாக என்ன வாக்குறுதி கொடுப்பாரோ? சுப்பிரமணியன் சாமி கிண்டல்!