India

உ.பியில் குப்பை வண்டியில் இருந்த மோடி, யோகி புகைப்படங்கள்.. தண்டனையாக தூய்மை பணியாளர் பணி நீக்கம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றார். உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியை பிடித்ததில் இருந்து அங்கு எதிர்க்கருத்து கொண்டவர்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பா.ஜ.க அரசை எதிர்த்து போராடுபவர்கள் மற்றும் அரசின் குறைகளை சொல்பவர்களை கூட உத்தரபிரதேச அரசு கைது செய்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையிலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கஞ்சி பகுதியை சேர்ந்த பாபி என்ற நகராட்சி தூய்மையாளர் இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கமான துப்புரவு பணியை மேற்கொண்டு வந்தார். அப்போது அவர் குப்பை ஏற்றும் குப்பை வண்டியில் பிரதமர் மோடி மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைப்படங்களை ஏற்றி சென்றுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து தூய்மை பணியாளர் பாபி சரிவர தனது பணியை செய்யவில்லை என்று கூறி அவரை நகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய துப்புரவு பணியாளர் பாபி, "அவர்கள் புகைப்படங்கள் குப்பையில் இருந்தது. ஆகவே அதை நான் எடுத்துவந்தேன்" எனக் கூறியுள்ளார். பா.ஜ.க அரசின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: கழிவு நீர் கால்வாயில் வந்த ரூ.2000 நோட்டுகள்..திரண்ட பொதுமக்கள்..எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!