India

“ரயிலை யாரோ கடத்துறாங்க.. காப்பாத்துங்க..” : வழிமாறி சென்ற ரயிலால் பதறிபோன பயணிகள் - என்ன ஆனது ?

டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து யஷ்வந்தபூர் செல்லும் சம்பர்க் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வழக்கம்போல நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் வேறு வழியாக சென்றுள்ளது.

இந்த நிலையில் ரயில் வழக்கமாக செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றதால் பயணிகள் சிலர் அச்சமடைந்துள்ளனர். அதில் ஒருவர் ரயில் வேறு யாரோ ஒருவரால் கடத்தப்பட்டதாக நினைத்து மிகவும் அஞ்சியுள்ளார்.

உடனடியாக, ட்விட்டர் மூலம், இந்திய ரயில்வே மற்றும் செகந்திரபாத் ரயில்வே கோட்டத்தை டாக் செய்த அவர், சம்பர்க் எக்ஸ்பிரஸ் ரயிலை யாரோ கடத்தி செல்வதாக கூறியிருந்தார். இவரது இந்த ட்வீட் சமூகவலைதளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இவரது இந்த ட்வீட்க்கு செகந்திரபாத் ரயில்வே கோட்டம் பதிலளித்துள்ளது. அதில், காஸிபேட்டா - பால்ரசா இடையே ரயில் தடத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பர்க் எக்ஸ்பிரஸ் ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதாகவும், ரயிலை யாரும் கடத்தவில்லை. அதுகுறித்து பயணிகள் யாரும் பயப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளது.

இதனிடையே போதிய முன்னறிவிப்பின்றி ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதாக பயணிகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ரயில் கடத்தப்பட்டதாக பயணி ஒருவர் பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: ஆம்புலன்ஸ் கொடுக்காததால் இறந்த தம்பி உடலை மடியில் வைத்து அமர்ந்திருந்த சிறுவன்.. ம.பி-யில் நடந்த சோகம் !