India

ஒரே தேர்தலில் நிற்கும் 3 மனைவிகள் - கணவரின் ஓட்டு யாருக்கு? : வேட்புமனு மூலம் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிங்ரவ்லி மாவட்டத்தை சேர்ந்தவர் சுக்ராம் சிங். இவர் அங்குள்ள கிராம பஞ்சாயத்தின் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இவருக்கு குசும்காலி மற்றும் கீதா சிங் என இரு மனைவிகள் உள்ள நிலையில், இவரின் இரு மனைவியும் பிபர்காட் கிராம பஞ்சாயத்து தேர்தலில் சார்பஞ்சாயத்துதாரர் பதவிக்காக வேட்புமனு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பெட்ராவில் உள்ள ஜனபத் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட ஊர்மிளா என்ற பெண்ணும் வேட்புமனு செய்துள்ளார். வேட்பாளர்கள் தங்களது குடும்ப உறவினர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதால் குசும்காலி மற்றும் கீதா சிங் இருவரும் தங்கள் கணவரான சுக்ராம் சிங்கின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல ஜனபத் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டுள்ள ஊர்மிளாவும் தனது கணவர் பெயராக சுக்ராம் சிங்கின் பெயரை குறிப்பிட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுக்ராம் சிங்குக்கு இரண்டு மனைவிகள் இருப்பது மட்டுமே அனைவரும் தெரிந்த நிலையில், மூன்றாவது மனைவி இருப்பதும் அதை அவர் மறைந்துள்ளதும் இதன்மூலம் தெரியவந்துள்ளது. மேலும் மூன்றாவது மனைவி இருப்பதை அவர் மறைத்ததால் அவரது பஞ்சாயத்தின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசியுள்ள சுக்ராம் சிங், பழங்குடியாக இருப்பதால் 2 திருமணம் செய்துக்கொள்ள கட்டுப்பாடுகள் இல்லை என கூறியுள்ளார். மேலும், ஊர்மிளா என்னுடைய மனைவி இல்லை, அவரை நான் திருமணம் செய்யவில்லை. அவர் வேறொருவரின் மனைவி, அவரிடம் இருந்து பிரிந்து என்னுடன் இருக்கிறார் எனக் கூறியுள்ளார். மேலும், தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: பெண்ணை கொன்று தின்ற வளர்ப்பு பூனைகள்.. நெஞ்சை பதற வைக்கும் பகீர் சம்பவம் - பின்னணி என்ன?