India

VPN, CamScanner உட்பட பல்வேறு செயலிகள் பயன்படுத்த தடை.. ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு போட்ட முக்கிய ஆர்டர் !

ஒன்றிய அரசு ஊழியர்கள் மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள் (VPN) மற்றும் தனியார் கிளவுட் சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய கணினி அவசரகால பதில் குழு (Cert-In) மற்றும் தேசிய தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூகுள் டிரைவ் மற்றும் டிராப்பாக்ஸ் போன்ற அரசு அல்லாத கிளவுட் சேவைகளில் இனி ரகசிய அரசாங்க கோப்புகளை ஒன்றிய அரசு ஊழியர்கள் சேமிக்க கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

VPN சேவைகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், பயங்கரவாத அமைப்புகளால் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதால் அவற்றையும் அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் அரசாங்க ஆவணங்களை ஸ்கேன் செய்ய மூன்றாம் தரப்பு மொபைல் ஆப் ஸ்கேனர் சேவைகளை பயன்படுத்த வேண்டாம். மொபைல் போன்களை 'ஜெயில்பிரேக்' அல்லது 'ரூட்' செய்ய வேண்டாம் எனவும் அந்த அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஒரே மாதிரியான சைபர் பாதுகாப்பு (cyber security guidelines) வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் இதன் மூலம், அரசாங்கத்தின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்த முடியும் எனவும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவு மற்றும் வழிகாட்டுதலை அனைத்து அரசு ஊழியர்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதை மீறினால் அந்தந்த துறைத் தலைவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: அமைதியான நாடுகளின் பட்டியல் வெளியீடு : பின்னடைவை சந்தித்த அமெரிக்கா - இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா?