India

“நூபுர் சர்மா கருத்துக்கு பிரதமர் மோடி வாய்மூடி மௌனமாக இருப்பது ஏன்?” : நாராயணசாமி கடும் தாக்கு!

தமிழகத்தில் ஆதீனங்கள் அரசியலில் தலையிடுவதை, எந்த காலத்திலும் ஏற்று கொள்ள முடியாது என்றும், ஆதீனங்கள் மத கடமையை மட்டும் செய்ய வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இந்தியாவில் சாதி, மத பேதமில்லாமல் வாழ்ந்து வருகிறோம். பா.ஜ.க மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. இதனால் பல பகுதியில் மத கலவரம் ஏற்படுகிறது.

நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க.வினர் தூண்டி விட்டுதான், நபிகள் குறித்து நூபுர் சர்மா விமர்சனம் செய்து உள்ளார். அவர் மீது பா.ஜ.க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய கருத்துக்கு பா.ஜ.க தலைவர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக நூபுர்சர்மா கூறி உள்ளார். பிரதமர் மோடி இது தொடர்பாக, வாய்மூடி இருப்பது மன வேதனையை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் ஆதீனங்கள், அரசியலில் நுழைய ஆரம்பித்து விட்டார்கள். அரசியல் வாதிகள் போல பேசுகிறார்கள். அரசை விமர்சனம் செய்கிறார்கள். ஆதீனங்கள் மத கடமையை மட்டும் செய்ய வேண்டும். ஆதினங்கள் அரசியலில் தலையிடுவதை, எந்த காலத்திலும் ஏற்று கொள்ள முடியாது. இது இந்து மதத்திற்கு இழுக்கு ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. லாரி ஓட்டுநர் போக்சோவில் சிறையில் அடைப்பு: போலிஸ் எடுத்த அதிரடி !